பாஜகவுடன், அ.தி.மு.க எந்த காலத்திலும் கூட்டணி வைக்காது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பாஜகவுடன் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜகவுடன் இப்போதும் கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை. இன்று, நாளை மட்டுமல்ல; எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.
இதுவே அ.தி.மு.க-வின் நிலைப்பாடு. கட்சியின் நிலைப்பாட்டில் எந்த நிலையிலும் மாற்றமில்லை. இந்த முடிவு கட்சி சார்பில் எடுக்கப்பட்டது. இந்த முடிவை கட்சியின் பொதுச்செயலாளரே அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளரிடமும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என பத்திரிகையாளர்கள் பல முறை கேள்வி எழுப்பினர். ஒவ்வொரு முறையும் கூட்டணி இல்லையென்று தான் அவர் பதிலளித்தார். இது தான் எங்களின் நிலைப்பாடும்.
நேற்றைய தினம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி திரித்து வெளியிடப்பட்டது. பாஜகவுடன் மறைமுக கூட்டணி இருப்பது போன்று தோற்றம் அளிக்கும் வகையில் ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது முற்றிலும் தவறு.
2026 தேர்தல் மட்டுமல்லாமல், அனைத்து காலங்களிலும் இதே முடிவு தொடரும் என்பது தான் கட்சியின் நிலைப்பாடு. தி.மு.கவை போல் மறைமுக கூட்டணி வைத்திருப்பவர்கள் நாங்கள் கிடையாது. உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்துள்ளார். அந்த அளவிற்கு அவர்களிடம் நெருக்கம் உள்ளது" எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“