Advertisment

சசிகலாவுக்கு எக்ஸிட் கொடுத்தாச்சு, ரீ-என்ட்ரி கிடையாது - ஜெயக்குமார் திட்டவட்டம்

என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது என்று சசிகலா கூறிய நிலையில், சசிகலா அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டார், அவர் மீண்டும் நுழைய முடியாது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

author-image
WebDesk
New Update
Jayakumar x

சசிகலா அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டார், அவர் மீண்டும் நுழைய முடியாது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அ.தி.மு.க முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது என்று அ.தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா கூறிய நிலையில், சசிகலா அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டார், அவர் மீண்டும் நுழைய முடியாது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Advertisment

அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, அ.தி.மு.க ஒன்றினைவது தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: “அ.தி.மு.க தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், ஒருசில சுயநலவாதிகள் கட்சியை இந்த அளவிற்கு எடுத்துச்சென்றுள்ளனர். இதை எல்லாவற்றையும் நான் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

எனக்கென்று சொந்த ஊர், சொந்த சாதி இல்லை. அ.தி.மு.க-வில் வாரிசு அரசியலும், சாதி அரசியலும் கிடையாது. ஆனால், அ.தி.மு.க-வில் தற்போது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி அரசியல் செய்கின்றனர். அ.தி.மு.க-வில் சாதி அரசியல் செய்வதை தொண்டர்கள் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நானும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். சாதி அரசியல் செய்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பேனா?

அ.தி.மு.க 3வது மற்றும் 4வது இடத்துக்கு சென்றுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம். அ.தி.மு.க-வுக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டு. அதனால், தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்க வேண்டாம் என்பதே அனைவரின் எண்ணமும். அ.தி.மு.க-வுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. நான் இத்தனை நாள் சொன்னது வேறு. நமது நேரம் கனிந்து வந்துள்ளது. நான் சொல்லி வந்த நேரம் இதுதான். தமிழக மக்கள் அ.தி.மு.க பக்கம் இருப்பார்கள். அ.தி.மு.க முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால், என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. என் பின்னால் தொண்டர்களும், மக்களும் இருக்கிறார்கள். அதனால் 2026-ல் அ.தி.மு.க ஆட்சியை தனிப்பெரும்பான்மையுடன் அமைப்போம்.” என்று கூறினார்.

இந்நிலையில் சசிகலாவின் பேச்சுக்கு அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார்,  “சசிகலா அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டார், அவர் மீண்டும் நுழைய முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 

.தி.மு.க-வில் தற்போது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி அரசியல் செய்கின்றனர் என்ற சசிகலாவின் குற்றச்சாட்டு குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: “அம்மா (ஜெயலலிதா) ஒரு முடிவு எடுத்தது உங்களுக்கு தெரியும். சசிகலாவும் சரி சசிகலாவைச் சார்ந்த குடும்பமும் சரி கட்சிக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி முழுமையாக போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டார், நாகரிகமாக சொன்னால் வெளியேற்றப்பட்டார், உங்கள் பாணியில் சொன்னால் விரட்டியடிக்கப்பட்டார் என்று சொல்லலாம். அப்படி வெளியேற்றப்பட்டவர்களில், சசிகலா கடிதம் கொடுத்ததினால் அவர்களை மட்டும் தான் சேர்த்தார்கள். அதன் பிறகு என்ன ஆனது, 2021 தேர்தலுக்கு முன்பு சசிகலா நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்று சொன்னார்கள் இல்லையா, எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னார். அதைத்தான், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னார்கள். சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, ஒரு சம்பந்தமும் இல்லை அவர் அ.தி.மு.க-வும் இல்லை, அ.தி.மு.க உறுப்பினரும் இல்லை அ.திமு.க-வுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா நான் என்ட்ரி ஆகிவிட்டேன் என்கிறார், உங்களுக்குத்தான் எக்ஸிட் கொடுத்தாச்சு, அப்புறம் எப்படி எண்ட்ரி ஆக முடியும், தொண்டர்களால் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில், எப்படி மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஜாதி மதம் மொழி இனம் எல்லாவற்றையும் கடந்து ஜெயலலிதா வழியில் எல்லா சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அ.தி.மு.க செயல் பட்டு வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் துவேஷத்தில் இந்த மலிவான பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அது கண்டிப்பாக எடுபட போவது கிடையாது.” என்று கூறினார்.

ஓ.பி.எஸ் அ.தி.மு.க-வில் நான்கு அணிகளும் இணைய வேண்டும் என்று இரண்டு முறை கடிதம் எழுதி இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  ஜெயக்குமார், “அவரைப் பற்றி உங்களுக்கு தெரியும். எவ்வளவு காலம் அவரைப் பற்றி நாம் சொல்லிக் கொண்டிருக்க முடியும், நீங்கள் எல்லாம் அவரைப் பற்றி பேசிப்பேசி பெரிய ஆளாக ஆக்கப்படுகிறார். அவரைப் பொறுத்தவரை, கட்சித் தொண்டர்களிடம் ஒரு கடுமையான அதிருப்திக்கு ஆளானவர். எப்படி என்றால், எம்.ஜி.ஆர் மாளிகையில் போய் நாங்கள் எல்லாம் கோயிலாக வணங்குகிற இடத்தை காலால் எட்டி உதைத்து, ஆவணங்களை கொள்ளை அடித்து சூறையாடி, அதற்குப் பிறகு நீதிமன்றம் தடைவிதித்து, அதற்கு பிறகு, அதை கொண்டு வந்து வைத்து, இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்று என்று கட்சியில் பல வகையில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்து அதில் தோல்வி அடைந்தவர். அவர் தி.மு.க-வை சட்டமன்றத்தில் பாராட்டி பேசியது, அவருடைய மகன் ஸ்டாலினை பாராட்டி பேசியது எல்லாவற்றையும் தொண்டர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, நீங்கள் சொன்னால் தொண்டர்களும் மக்களும் ஏற்றுக் கொள்வார்களா, ஒன்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களுக்கு தெளிவாக தெரியும் யார் நிலையாக இருக்கிறார்கள்? யார் அடிக்கடி மாறுகிறார்கள் என்று தெளிவாக தெரியும்.

ஒரு குழப்பவாதி அல்லது சந்தர்ப்பவாதி அதேபோன்று சுயநலவாதி என நான் அவரை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள் அது எல்லாமே அவருக்கு பொருந்தும் என்று தான் கட்சிக்காரர்கள் நினைக்கிறார்கள்.” என்று ஜெயக்குமா காட்டமாகக் கூறினார்.

அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் கூட்டணி இல்லை என்கிறீர்கள், ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டால் அ.தி.மு.க நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் கூறுகையில், “அண்ணாமலையை மாற்றி பில்லேடனே வந்தாலும் சரி ஒரு மாற்றமும் இருக்காது முன்வைத்த காலை பின் வைப்பதாக இல்லை” என்று கூறினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க-வும் தே.மு.தி.க-வும் புறக்கணித்ததால் அது பா.ம.க-வுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அது பா.ம.க-வுக்கு சாதகமாக இருக்காது என்று அன்புமணி கூறி இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், “கண்டிப்பாக அவர் ஒரு கூட்டணியில் இருக்கிறார், அவருக்கு எப்படி ஓட்டு போடுவார்கள், அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள். ஏற்கனவே, நான் சொன்ன மாதிரி கட்சி இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கிறது, என்றால் அந்த புறக்கணிப்பின் அடிப்படையில் தான் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் இருப்பார்கள். இந்த புறக்கணிப்பு அடிப்படையில் தொகுதியிலும் சரி வாக்காளர்களும் சரி தொண்டர்களும் சரி கண்டிப்பாக தேர்தலை புறக்கணிப்பார்கள்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment