அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே பெரும் மோதலாக நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக கருதப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் இ.பி.எஸ்-க்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இ.பி.எஸ் ஆதரவாளராக பார்க்கப்படுகிற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் தப்பு மேல தப்பு செய்கிறார் என்றும் அவர் தவறான பாதையில் செல்கிறார் என்றும் விமர்சித்து கூறினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அதிமுக என்று சொல்லும்போது தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் கழகத்துக்கு அமைப்புகள் இருக்கிறதோ அங்கிருந்து முழுமையாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒற்றைத் தலைமை அதிமுகவுக்கு தேவை என்று தீர்மானித்து அந்த ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என்ற கருத்தை ஒவ்வொரு மாவட்டங்களும் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இன்று அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில், அண்ணா தொழிற்சங்கத்தின் 75 மாவட்ட செயலாளர்கள், 25 மண்டலச் செயலாளர்கள், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவர் ஒற்றைத் தலைமைக்கு தலைமை தாங்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றி அந்த தீர்மானத்தை தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.” என்று கூறினார்.
அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவுவதாகவும் தருமம் வெல்லும் என்று ஓ.பி.எஸ் ட்வீட் செய்திருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக ஒரு ஜனநாயகம் மலந்த இயக்கம். இங்கெ எந்த அராஜகப் போக்கும் கிடையாது. நீங்கள் கடந்த 8 நாட்களாக முகாமிட்டுள்ளீர்கள். அனைவரும் எவ்வளவு ஒரு எழுச்சியுடன் ஆர்வத்தனுடன் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்ற வகையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்த்து வருகிறீர்கள்.
ஓ.பி.எஸ் பொறுத்தவரை அவர் தப்பு மேல தப்பு பண்ணிக்கொண்டிருக்கிறார். ‘பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை’ எம்.ஜி.ஆர் பாடல் ஒன்று உள்ளது. அந்த வகையில், ஓ.பி.எஸ் தவறான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதை ஒரு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் மனக் கஷ்டத்துடன் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்-சும் பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டும். பொதுக்குழு என்பது உச்ச பட்ச அதிகாரம். பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட்டாக வேண்டும். ஓ.பி.எஸ் உள்பட எல்லோருமே கட்டுப்பட்டாக வேண்டும். அதுதான் தொண்டர்களுடைய எண்ணமும்கூட.” என்று கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் நாளைக்கு பொதுக்குழுவில் கலந்துகொள்வாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “எனக்கு ஜோசியம் பார்த்து பழக்கமில்லை. இந்த கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான். இருவரும் சேர்ந்துதான் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அவர் கலந்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். அதனால், ஓ.பி.எஸ் பொதுக்குழுவில் கலந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் கலந்துகொள்வாரா இல்லையா என்று நீங்கள் அவரிடம் கேளுங்கள்.” என்று கூறினார்.
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையேயான சமரச முயற்சியெல்லாம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “அதாவது ஒரு கருத்து தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டு, அந்த கருத்தின் அடிப்படையில் இன்றைக்கு ஒற்றைத் தலைமையை நோக்கி கட்சி வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, நாம் தொண்டர்களின் எண்ணத்துக்கு மதிப்பு தர வேண்டும். தொண்டர்கள் விரும்புவதும் அதுதான்; பொதுமக்கள் விரும்புவதும் அதுதான்; தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் விரும்புவதும் அதுதான்; கட்சிக்காரர்கள் அனைவரும் விரும்புவதும் அதுதான்; ஊரோடு ஒத்து வாழ் என்பது போல எல்லோரும் ஒத்து வாழலாம் என்பதுதான் எங்கள் விருப்பம்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.