Advertisment

விஜய் குறித்து செல்லூர் ராஜூ ஏன் அப்படி கூறினார் என போனில் கேட்கிறேன்; ஜெயக்குமார்

அடுத்த தலைமுறை விஜய் தான்; செல்லூர் ராஜு ஏன் இது போன்ற கருத்தை தெரிவித்தார் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கிறேன் – ஜெயக்குமார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sellur Raju jayakumar vijay

அடுத்த தலைமுறை விஜய் தான்; செல்லூர் ராஜு ஏன் இது போன்ற கருத்தை தெரிவித்தார் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கிறேன் – ஜெயக்குமார்

விஜய் அடுத்த தலைமுறை தலைவர் என செல்லூர் ராஜூ ஏன் கூறினார் என அவரிடம் நான் தொலைப்பேசியில் விசாரிக்கிறேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கினார் நடிகர் விஜய். அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசிய அரசியல் கருத்துக்கள், தமிழக அரசியல் கட்சிகளிடம் பேசு பொருளானது.

இதையும் படியுங்கள்: ஈ.பி.எஸ்., மீது விசாரணை: சேலம் போலீசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

இந்தநிலையில் மதுரையில் நடைபெற்ற விழாவில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்லூர் ராஜூ, ​​“அடுத்த தலைமுறை விஜய் தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? ஒரு தமிழராக விஜய் தனது சொந்த பணத்தை 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளார். யார் யாரோ தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் வரக்கூடாது? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம். அவர் எங்களுக்கு போட்டியாக வருவாரா என சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்கு போட்டி தி.மு.க தான்” என்று கூறினார்.

இந்தநிலையில், சிலம்புச்செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்களின் 118வது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தியாகராய நகரில் உள்ள மா.பொ.சி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மா.பொ.சியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அனைவரும் கொண்டாடும் ஒரு நாள். தமிழை வைத்து வியாபாரம் செய்யும் குடும்பங்கள், எந்தெந்த குடும்பங்கள் என்பது உங்களுக்கே தெரியும். அவர்கள் இருக்கும் நிலையில் உணர்வுபூர்வமாக தமிழுக்காக வாழ்ந்து மறைந்தவர் மா.பொ.சி.

அம்மா உணவகம் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்துள்ளது. அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அம்மா கொண்டு வந்த திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா செய்யப்படுகிறது. மக்கள் இதற்கான பதிலை மக்களவை தேர்தலிலும், அடுத்து நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அளிப்பார்கள். 1000 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது. தி.மு.க போன்று மன்னர் பரம்பரை கிடையாது. அ.தி.மு.க ஜனநாயக இயக்கம். அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி. கூட்டணியில் இருப்பவர்கள் சில முன்மொழிவுகளை வைப்பார்கள். அதை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என முடிவு செய்யும் இடத்தில் இருப்பது அ.தி.மு.க.,தான்.

எதிர்க்கட்சி கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல, அவிழ்த்தால் சிதறிவிடும். ராகுலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஆம் ஆத்மி முதலில் குரல் கொடுத்துள்ளது. இவர்கள் கூட்டணியில் பல முரண்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை எங்கள் தலைமையில்தான் கூட்டணி. தேர்தல் வரும் போது அனைவரும் எங்கள் கூட்டணிக்கு வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. யார் என்பது சஸ்பென்ஸ். இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நெருங்க நெருங்க பல கட்சிகள் எங்களோடு வரும்.

வேங்கைவயல் பிரச்சினை நடந்து இத்தனை மாதங்களாகியும் இன்னும் குற்றவாளியை கண்டறிய முடியவில்லை. இப்படி இருக்கும்போது சமூக நீதிக்கும் முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது. சமூக நீதி என்றால் அ.தி.மு.க.,தான். விழுப்புரத்தில் கோயில் பூட்டப்பட்டுள்ளது. அதை திறக்க நடவடிக்கை எடுத்தார்களா?.. ஆனால் சமூக நீதி பற்றி மட்டும் பேசுகிறார்கள். செயலிலும் கட்ட வேண்டும்” என்று கூறினார்.

நேரு விளையாட்டு மைதானத்திலா ஆபரேஷன் நடத்துவது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது தொடர்பான கேள்விக்கு, ”மக்களின் கேள்விக்கு அமைச்சர் முறையாக பதிலளிக்க வேண்டும். பொறுப்பற்ற பதிலை சொல்லக் கூடாது. உண்மையில் அடைப்பு இருந்ததா? ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதா? இப்படி மக்களின் கேள்விகளுக்கும் எங்களைப் போன்ற அரசியல் தலைவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்வது அரசின் கடமை. கிண்டலும், கேலியும் செய்யும் அமைச்சராகத்தான் இவர்கள் இருக்கிறார்கள்” என்று ஜெயக்குமார் கூறினார்.

நடிகர் விஜய்தான் அடுத்த தலைமுறை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், ”அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இது பெரிய சமுத்திரம். இதில் நீந்தி வர வேண்டும். அரசியலுக்கு வருபவர்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஏன் இது போன்ற கருத்தை தெரிவித்தார் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கிறேன்” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jayakumar Sellur Raju Admk Tamilnadu Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment