முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி , மாநில அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
" அளவில்லா அன்பு, ஆகச்சிறந்த நிர்வாகத்திறன், தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய்த்தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் உயர்வும், மகிழ்ச்சியுமே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு "மக்களால் நான்; மக்களுக்காகவே நான்" என தன்வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்த மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன்." என்று முதல்வர் தனது ட்விட்டரில் பதிவு செய்தார்.
இந்திய அரசியல் வானில் சுடர்மிகு நட்சத்திரமாய் ஒளிவீசிய தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில், அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய இதயதெய்வம் அம்மா அவர்கள் நீடுதுயில் கொள்ளும் இந்நினைவிடத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களை போற்றி வணங்கி மரியாதை செலுத்தினோம். #அம்மா pic.twitter.com/yq9CsLeVOi
— O Panneerselvam (@OfficeOfOPS) December 5, 2020
அதன் பின்னர், ஜெயலலிதா 4ம் ஆண்டு நினைவுதின உறுதிமொழியை ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஜெயலலிதா நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு:
"தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தியாக வாழ்வையும், அயரா உழைப்பையும் மனதில்கொண்டு, அவர் காட்டிய வழியில், அதிமுகவைக் கட்டிக் காத்திட உறுதி ஏற்கிறோம்.
அம்மா அவர்கள் தமது வாழ்வின் மிக அற்புதமான 34 ஆண்டுகளை, அதிமுகவுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த, தியாகச் செம்மல். அவர்கள் கழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளை, எந்நாளும் நினைவில் கொண்டு, கடமை உணர்வோடு பணியாற்றிட, உளமார உறுதி ஏற்கிறோம்.
'அதிமுக என்பது ஆயிரம் காலத்துப் பயிர்; இது, தமிழ் நாட்டு மக்களுக்குத் தொண்டாற்ற தழைத்து நிற்கும் ஆலமரம்' என்று உரைத்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் முழக்கத்தின்படி, கட்சியின் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற உழைப்போம், உழைப்போம், என்று உறுதி ஏற்கிறோம்.
தமிழ் நாடு அனைத்துத் துறைகளிலும் ஏற்றம் பெற்று, அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் மாநிலமாகத் திகழ்வதை, தமது ஆட்சிக் காலத்தில் உறுதி செய்தார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. புரட்சித் தலைவியின் உழைப்பால் உருவான கழக அரசு, அவர்கள் காட்டிய வழியில் நிறைவேற்றி வரும், எண்ணற்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், அனைவருக்கும் சென்றடைவதை, உறுதி செய்வோம் என்று, உறுதி ஏற்கிறோம்.
தமிழ் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், ஓடோடிச் சென்று உதவும் உற்ற துணையாகவும், வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் திகழ்கின்ற வகையில், அதிமுக என்ற கழகத்தை உருவாக்கிய சிந்தனை சிற்பி, ஜெயலலிதா. அவர் வகுத்துத் தந்த அரசியல் பாதையில், அதிமுக வெற்றி நடைபோட, இயன்ற அனைத்தையும் செய்வோம், செய்வோம் என்று உறுதி ஏற்கிறோம்.
ஜனநாயகத்தின் பெயரில், ஒரு குடும்ப ஆட்சி நிலைபெற்றுவிட்டால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல இயலாது என்பதை விளக்கிக் கூறிய அரசியல் ஆசான், நம் புரட்சித் தலைவி. அவர் காட்டிய உண்மையான ஜனநாயகம் வேரூன்றவும், ஒரு குடும்பத்தின் ஏகபோக அரசியலும், ஆட்சியும் ஏற்படாத வண்ணம், மக்களாட்சியின் மாண்புகளைக் காப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.
இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட நேரங்களில், சுற்றிச் சுழன்று, அல்லும், பகலும் அயராது பாடுபட்டவர் ஜெயலலிதா. அவர் காட்டிய வழியில் பல்வேறு இயற்கைப் பேரிடர் நேரங்களில், தமிழ்நாட்டு மக்களுக்காக அற்புதமாய் பணியாற்றும் அதிமுக அரசின் சிறப்பான பணிகளை, மக்களிடம் கொண்டு சேர்க்க, உறுதி ஏற்கிறோம்.
ஏழை, எளியோருக்கு சமூகப் பாதுகாப்பு, பெண்களுக்கும், முதியவர்களுக்கும் முன்னுரிமை, கிராமப்புற மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்கள் என்று, நம் புரட்சித் தலைவி, எம்ஜிஆர் வழியில் ஆட்சி நடத்தினார். நம் இருபெரும் தலைவர்களின் எண்ணப்படி, நடைபெறும் அதிமுக அரசின் சாதனைகள் தொடர, அயராது உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.
'எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்தார் ஜெயலலிதா. அவரின் சபதத்தை நிறைவேற்றும் வகையில், 2021-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், ஜெயலலிதாவின் கடமை தவறாத பிள்ளைகளாக ஒன்றுபட்டு உழைத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக, அதிமுகவை மகத்தான வெற்றிபெறச் செய்வோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.
'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?' என்று, அதிமுகவின் வீர அணிவகுப்புகளைக் கண்டு, வெற்றி முழக்கம் செய்தவர், நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
நமது ஒற்றுமையே, நமது வெற்றிக்கு அடிப்படை.
நமது முயற்சியே அதிமுகவின் வெற்றி.
அதிமுகவின் வெற்றியே, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோருக்கு நாம் செலுத்தும் காணிக்கை
என்பதை உணர்ந்து, அயராது உழைப்போம், உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்"
என்ற உறுதி மொழியை அதிமுகவினர் ஏற்றுக் கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.