முன்னாள் தமிழக முதல்வர், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.25 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தாக மருத்துவமனை அறிவித்தது.
இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள் இருப்பதால் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த போதும், அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அவரது உடலை எம்பாமிங் செய்வது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இருமுறை மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தவறான தகவல் வெளியிட நேர்ந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, இந்த மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“