Advertisment

3 அணிகளாக அதிமுக; சிறுபான்மை- பட்டியலின மக்கள் நம்பிக்கை இழப்பு: பூங்குன்றன் விமர்சனம்

Jayalalitha assistant Poongunran facebook post questioned ADMK future: அதிமுக என்ற தேன்கூட்டில் கல் எறியப்பட்டு நெடுங்காலம் ஆயிற்று; ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வேதனை

author-image
WebDesk
New Update
3 அணிகளாக அதிமுக; சிறுபான்மை- பட்டியலின மக்கள் நம்பிக்கை இழப்பு: பூங்குன்றன் விமர்சனம்

அதிமுகவுக்குள் நிலவும் அதிகாரப் போட்டியால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த 2016ல் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே கட்சிக்குள் பிரிவுகள் ஏற்பட்டு வருகிறது. சசிகலா முதல்வராக நினைத்ததால், கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தினார் அப்போதைய முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம். அதன்பின் சசிகலா சிறைக்குச் செல்ல நேர்ந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அரியணையில் ஏறினார். பின்னர் வெளிப்புற சக்திகளின் உத்தரவால் ஒருவழியாக ஒபிஎஸ்- இபிஎஸ் இணைப்பு நடைபெற்றது. ஏனெனில் இரட்டை இலை சின்னம் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவைப்பட்டது.

ஆனால் அப்போதிலிருந்தே ஒபிஎஸ்-இபிஎஸ் இடையே அதிகாரப் போட்டி ஆரம்பித்துவிட்டது. அதன் வெளிப்பாடு தான் கட்சியின் முதன்மைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, குழு கட்சியை வழி நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் என்ற புதிய பதவிகளும் உருவாக்கப்பட்டது.

அடுத்ததாக 2021 சட்டமன்ற தேர்தல் ஆரம்பித்தலிருந்தே ஒபிஎஸ்-இபிஎஸ் இடையே போட்டி அதிகமானது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது அதில் முதல் போட்டி. அதில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார். அடுத்து தேர்தல் தோல்விக்கு இருவரும் மாறிமாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் யார் என்ற போட்டி ஆரம்பமானது. இதிலும் பழனிச்சாமியே வெற்றி பெற்றார்.

இப்போது அதிமுகவுக்கு அடுத்த தலைவலியாக சசிகலா விடுதலை அமைந்துள்ளது. விடுதலையானபோது அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தெரிவித்த சசிகலா, தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப் பிறகு கட்சியை கைப்பற்றும் வேலையில் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்,

அதிமுக என்ற தேன்கூட்டில் கல் எறியப்பட்டு நெடுங்காலம் ஆயிற்று. அதிகாரம் என்ற கவசம் இவ்வளவுநாள் தடுத்துக் கொண்டிருந்தது. கவசம் உடைக்கப்பட்டுவிட்டது. தேனீக்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. இனி இயல்புநிலைக்கு திரும்புமா?

மூன்று அணிகளாகி சண்டை போட்டுக் கொள்ளும் உங்களைப் பார்த்து நம்பிக்கை இழந்தவர்கள் நம்பிக்கை தேடி பயணமாகி விட்டனர். பாதையை காட்டி விட்டனர். இனி அந்த பாதையில் பயணிப்பது சுலபம். பலருக்கும் அந்த சிந்தனை மலர ஆரம்பித்துவிட்டது என்பதை நான் உணர்கிறேன். எந்த அணியிலும் விலகியவர்களை திட்டத் துடிக்கும் தொண்டர்களே விழித்துக்கொள்ளுங்கள். திட்டுவதில் நேரத்தை செலவழிப்பதைவிட, எதனால் அவர்கள் விலகினர் என்பதைச் சிந்தியுங்கள். அதுவே இன்றையத் தேவை. வசைபாடியே இருப்பவரையும் இழந்துவிடாதீர்கள்.

சிறுபான்மை சமூகத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக உங்களைவிட்டு விலகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். பட்டியலின மக்களும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இவை உங்களுக்குப் தெரிகிறதா? இல்லை நமெக்கென்ன என்று இருக்கிறீர்களா? பெரும்பான்மை சமுதாயத்திலும் ஒற்றுமை இல்லை. சிறுபான்மை சமுதாயம் ஒருபோதும் பெரும்பான்மை சமுதாயத்தை ரசிக்காது என்பது வரலாறு. இனி ஒவ்வொரு அணியிலும் விலகலை எதிர்பார்க்கலாம். நம்பிக்கை பெற்றவர்கள் விலகுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கையை மற்றவர்களும் விட்டுவிடப் போகிறார்கள். மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கையை விதைக்காதவரை இவற்றை கட்டுப்படுத்துவது கடினம்.

ஊர்கூடி தேர் இழுக்கலாம். இல்லை இல்லை நான் ஒருவனே இழுத்துவிடுவேன் என்று நினைப்பது இப்போதைக்கு அறியாமை. ஒற்றுமை இல்லாதவரை உங்களில் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கும். அங்கே இளைய தலைவர் உருவாகிவிட்டார். உங்கள் வயதென்ன என்பதையும் கணக்கிட்டுப் பாருங்கள். நம்பிக்கை அங்கே வளர ஆரம்பித்துவிட்டது என்பதை உங்களால் புரிந்துக் கொள்ளமுடிகிறதா? எதிரியை விமர்சனம் செய்வதை விட உங்களுக்குள் விமர்சனம் செய்து கொள்ளுவதுதான் அதிகம். அசிங்கம்.

நான் சொல்வது உங்கள் நன்மைக்கு என்பதை ஏன் உங்களால் உணர முடியவில்லை. வேதனை! நான் சொல்லும் கருத்துக்கள் உங்களுக்கு கசப்பாக இருந்தால் வருந்துகிறேன். கசப்பாக இருக்கும் மருந்துதான் நோயை குணமாக்குகிறது. நான் எதையாவது சொல்லி உங்களை இணைக்கலாம் என்றால் அது முடியாது போல... என்னை வசைபாடுவது, நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் தலைவரை வசைபாடுவதற்குச் சமம் என்பது போகப் போக உங்களுக்குப் புரியும். பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்றால் தர்மத்தின் நிலை என்ன?  

தந்தை விட்டு சென்ற தொழிலை பார்த்துக்கொள்வது சாதனை அல்ல. வளர்ப்பதுதான் சாதனை அல்லது புதிய தொழிலை தொடக்கி நீங்களே வளர்ந்தால்தான் சாதனை. நம் தந்தையும், தாயும் விட்டுச் சென்றதை வளர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அழித்துவிடாதீர்கள். தொண்டர்களை தவிக்கவிடாதீர்கள். என பூங்குன்றன் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Admk Jayalalithaa Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment