Advertisment

'இவர் ஏக்நாத் ஷின்டே அல்ல... அ.தி.மு.க-வின் வருங்காலம்': எஸ்.பி வேலுமணி பற்றி பூங்குன்றன் பதிவு

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் நம்பிக்கையான உதவியாளராக இருந்த பூங்குன்றன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஏக்நாத் ஷிண்டே அல்ல, அ.தி.மு.க-வின் வருங்காலம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.   

author-image
WebDesk
New Update
poongundran SP Velumani

பூங்குன்றன் - எஸ்.பி. வேலுமணி

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் நம்பிக்கையான உதவியாளராக இருந்த பூங்குன்றன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஏக்நாத் ஷிண்டே அல்ல, அ.தி.மு.க-வின் வருங்காலம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.   

Advertisment

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க சந்தித்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் 67 இடங்களில் வெற்றி பெற்றது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க-வும் 1 தொகுதியில் கூட்டணி கட்சியான பா.ஜ.க-வும் வெற்றி பெற்றது. கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க கனிசமான இடங்களில் வெற்றி பெற்றது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்தது. எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு ஆதரவுடன் சட்டப் போராட்டம் நடத்தி அ.தி.மு.க-வைக் கைப்பற்றினார். ஓ.பி.எஸ் அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஆனதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பங்கு பெரிதும் பேசப்பட்டது. அண்மையில்கூட, பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர், டெல்லி சென்று பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்த அ.தி.மு.க குழுவில் முக்கிய தலைவராக எஸ்.பி. வேலுமணி இடம்பெற்றிருந்தார். 

இதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் எஸ்.பி. வேலுமணி அ.தி.மு.க-வின் ஏக்நாத் ஷிண்டே என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மகாராஷ்டிரா அரசியலில், பால் தாக்கரே காலத்தில் இருந்து சிவசேனாவில் இருந்த ஏக்நாத் ஷிண்டே, பால் தாக்கரே மறைவுக்குப் பிறகு, உத்தவ் தாக்கரேவுக்கு பக்க பலமாக இருந்து வந்தார். 2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா, தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சி அமைத்தது.  உத்தவ் தாக்கரே முதலமைச்சரானார். இதனால், பா.ஜ.க தலைமை உத்தவ் தாக்கரே மீது ஏமாற்றமும் கோபமும் அடைந்திருந்தது.  

இதைத் தொடர்ந்து, பா.ஜ.க ஆதரவுடன், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி மகாராஷ்டிரா முதல்வரானார். அதுமட்டுமல்ல, கட்சியையும் கட்சி சின்னத்தையும் கைப்பற்றினார். தற்போதும் பா.ஜ.க ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தொடர்கிறார்.

அதே போல, தமிழக  அரசியலில் அ.தி.மு.க பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நெறுக்கமாக உள்ள எஸ்.பி. வேலுமணியும் ஏக்நாத் ஷிண்டே போல, பா.ஜ.க ஆதரவாளராக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் பேசப்பட்டது.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்: https://www.facebook.com/photo/?fbid=1085877205906471&set=a.109455706881964

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையான உதவியாளராக இருந்த பூங்குன்றன், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஏக்நாத் ஷிண்டே அல்ல, அ.தி.மு.க-வின் வருங்காலம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பது கூறியிருப்பதாவது: “விசுவாசம்..! யாரிடம் இருக்கிறது? தகப்பன், பாட்டன் காலத்திலிருந்து வேலை செய்யும் ஊழியனிடம் தான் அதிக விசுவாசத்தை எதிர்பார்க்கலாம் என்கிறது மகாபாரதம். அப்படி தன்னுடைய தந்தையின் கட்சிப் பணியை பார்த்து வளர்ந்த மகன் ரத்தத்தில் விசுவாசம் ஊறிக்கொண்டிருக்கிறது. எந்த அணியில் வேண்டுமானால் அவன் இருக்கலாம்; அவன் முடிவு தவறாக கூட இருக்கலாம்; ஆனால் அவன் எங்கிருந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவன் மூச்சில் ஓடிக் கொண்டிருக்கும். அப்படி தன்னுடைய தந்தையினுடைய கட்சிப் பணியை பார்த்து அரசியலுக்கு வந்தவர்தான் ரத்தத்தின் ரத்தம் எஸ்பி வேலுமணி அவர்கள். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது நான்கு ஆண்டுகால ஆட்சியை வெற்றிகரமாக நடத்தியது என்றாலும், கட்சி ஒரு தலைமைக்குள் வந்திருக்கிறது என்றாலும் அதற்கு மூளையாக செயல்பட்டவர், செயல்படுபவர் வேலுமணி அவர்கள். வேண்டிய இடத்தில் சமரசமும், வேண்டாத இடத்தில் எதிர்ப்பும், குனிய வேண்டிய இடத்தில் குனிந்தும்; நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்ந்தும் இந்த கட்சியை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கவசமே எஸ் பி வேலுமணி அவர்கள்தான். நான்கு ஆண்டுகால ஆட்சியை வெற்றிகரமாக நடத்தியதற்கு இவர் செய்த சமரசம் தான் காரணம் என்பது அரசியல் தெரிந்தவர்களுக்கு விளங்கும்.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் பொதுத் தேர்தலில், அதிக வாக்குகள் அதாவது சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எஸ்பி வேலுமணி அவர்கள். நேற்று தொகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்; இன்று கோவையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு அவர் கழகத்திற்கு விசுவாசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கழகத்தில் வேறு ஒரு இளைஞர் தான் சார்ந்த மாவட்டத்தை வெற்றி பெற்ற வைத்திருக்கிறார் என்று உங்களால் காட்ட முடியுமா? புதிதாக வருபவர்களுக்கும், துதிபாடிகளுக்கும் வேண்டுமென்றால் இந்த கட்சி தங்கிவிட்டுப் போகும் ஒரு சத்திரமாக இருக்கலாம். ஆனால் தந்தைக்கு அடுத்து தமயனாக வளர்ந்தவனுக்கு இந்த கட்சி உயிர் போன்றது. அந்த உணர்வில் தான் பல பேர் இன்னும் அமைதியாக காத்திருக்கிறார்கள். 

2011ம் ஆண்டு அரசியலுக்குப் பிறகு தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கட்சிக்காரர்களுக்கு உதவி செய்து, அவர்களுக்கு பதவி கிடைக்க சிபாரிசு செய்து, பதவி கிடைக்காமல் வருபவர்களை கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் வார்த்தை கூறி அரவணைத்து செல்பவர் இவர் மட்டுமே..! 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று தமிழகம் முழுவதும் செல்வாக்கு பெற்ற ஓர் இளைஞர் இருக்கிறார் என்றால் அது சகோதரர் எஸ்பி வேலுமணி அவர்கள் மட்டுமே..! வேறு யாரும் இல்லை என்பது நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டியதில்லை. வேலுமணி அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும், அது கட்சியின் வளர்ச்சிக்காகத்தான் இருக்கும் என்பது பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும். தனக்கு நல்லது நடக்காவிட்டாலும், தன் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று எதற்கும் விட்டுக் கொடுத்துப் போகும் குணம் படைத்தவர் எஸ்பி வேலுமணி அவர்கள். அவர் ஏக்நாத் ஷிண்டே அல்ல.. கழகத்தின் வருங்காலம்..! 

அன்புச் சகோதரர் மேலும் வலிமை பெற்று வளம் பெற வேண்டும் என்று பிறந்தநாளில் மனமாற வாழ்த்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment