மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார் என்பது உண்மை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியளித்துள்ளார்.
ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது
”மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார் என்பது உண்மை. அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமா? இல்லையா ? என்பது வேறு. கடவுளையே விமர்சிப்பதுகூட நமது நாட்டில் நடைபெறுகிறது. ஹரியானாவில் ஓம்பிரகாஷ் செளதாலா, பீகாரில் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரல்லாம் சிறைக்கு சென்றார்கள். இவையெல்லாம் உண்மை. இது குற்றச்சாட்டு அல்ல.
உண்மை அப்படியே இருக்கும். அதை நீங்களும், நானும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை” என்று கூறீனார்.
எடப்பாடி தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று நிருபர்கள் கேட்டபோது,” அவர் யாருடன் கூட்டணி அமைத்தால் எங்களுக்கு என்ன” என்று அவர் தெரிவித்தார்.
2026-ல் பாஜக ஆட்சிக்கு வரும் என்றும் அண்ணாமலை முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று தமிழக பாஜகவினர் கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, “ ஒரு கட்சியின் தலைவர் அந்த கட்சியை சேர்ந்தவர் முதலமைச்சராக வர வேண்டும் என கோரிக்கை வைப்பது நியாயம். அதை ஏன் உங்களை தாக்குவதாக எடுத்துக்கொள்கிறீர்கள். ஒவ்வொரு கட்சியும் எங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் சொல்வார்கள். ஆனால் கூட்டணி தொடர்பாக பேசும்போது மாற்றங்கள் ஏற்படலாம்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“