மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம், வரும் மார்ச் மாதம் திறக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் மணிமண்டபம் கட்டப்படுவது தவறான முன் உதாரணமாகிவிடும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்பட்டு வருவதாக அந்த மனுவில் கூறியிருந்த ரவி, நினைவிடம் அமைக்கும் பணிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் சத்தியநாரயாணன், ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கர்நாடக நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், அம்மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு காலத்தில் அவர் உயிரிழந்துவிட்டதால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது.
இன்றைய தேதியில் அவர் குற்றவாளி இல்லை என்பதால், அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு நினைவிடம் கட்டப்படுவதாக வாதிட்டார். மேலும், மாநிலக் கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம், சென்னை மாநகராட்சி உள்ளிட்டவைகளிடம் இருந்து முறையான அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் வாதிட்டார்.
மேலும், நினைவிடப் பணிகள் 90 சதவிகித முடிவடைந்த நிலையில், 2019-ம் ஆண்டு மார்ச் இறுதியில் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.