மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த தினம் இன்று. அவரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அதிமுக தலைமை மற்றும் தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். அதிமுக தொண்டர்களுக்கு பிறகு இனிப்பு வழங்க உள்ளனர்.
அம்மா நாளிதல் சார்பில் இன்று பிறந்தநாள் சிறப்பு மலரை இருவரும் இணைந்து வெளியிட உள்ளனர். வெலிங்க்டன் கல்லூரியில் உள்ள ஜெவின் சிலைக்கும் இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். பிறகு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவையும் அவர்கள் திறந்து வைக்கின்றனர்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதிமுகவை காப்பேன் என்று தீபமேற்றி தொண்டர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று ஏற்கனவே இருவரும் கேட்டுக் கொண்ட நிலையில் இன்று மாலை அந்த நிகழ்வும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது போலவே ஜெவின் பிறந்த நாளை அரசு விழாவாகவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாகவும் இன்றைய தினம் முதன்முறையாக கடைபிடிக்கப்படுகிறது.
ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். சசிகலா அவர் தங்கியிருக்கும் வீட்டிலேயே ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil