J Jayalalithaa images, old pictures, quotes: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கார்டியாக் அரெஸ்ட்டால் 2016, டிசம்பர் 5-ம் நாள் மரணமடைந்தார். அவரது இழப்பு அதிமுக-வினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா 1982 ஆம் ஆண்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
அரசியல்வாதியாக மாறிய நடிகை கடலூரில் தனது முதல் பொதுக்கூட்டத்தில் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் வெற்றிகரமான உரையை நிகழ்த்தினார்.
ஒரு வருடம் கழித்து, ஜெயலலிதா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
1984 ஆம் ஆண்டில் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதே ஆண்டில், எம்.ஜி.ஆர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை பெற சென்றார். அப்போது கட்சியில் அதிக முக்கியத்துவம் பெற்றார் ஜெயலலிதா.
பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். இருந்தபோதிலும், அதே ஆண்டில் மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கு இரண்டு முக்கியமான தேர்தல்கள் நடைப்பெற்றன. எம்.ஜி.ஆர் இல்லாத நிலையில் ஜெயலலிதா அதனை வெற்றிகரமாக நடத்தினார்.
ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் முதல் பெண் தலைவரானார்.
அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து 1991 ல் முதல்முறையாக முதல்வராக ஆனார், 234 இடங்களில் 225 இடங்களை இக்கூட்டணி வென்றது.