Advertisment

ஆறுமுகச்சாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல்: சசிகலா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க பரிந்துரை

சகிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Justice Arumughaswamy commission

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு.. பெங்களூரு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சசிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என ஆணையம் முடிவு செய்வதால் அவர்களிடம் விசாரிக்க வேண்டுமென ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் அங்கு சிகிச்சையில் இருந்த அவர், அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே விசாரணைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு உதவியுடன் விசாரணையை மீண்டும் தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் தொடா்ச்சியாக 2022 மார்ச் 7 முதல் ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது. ஓ.பன்னீா்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினா்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவா்கள் என மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவக்குழு தனது அறிக்கையை ஆணையத்திடம் ஆகஸ்ட் 3-ம் தேதி சமர்ப்பித்தது.

அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம், 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் ஆகஸ்ட் 27-ம் தேதி சமர்ப்பித்தது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய் கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மர்மமாக வைக்கப்பட்டுள்ளன.

சசிகலாவின் உறவினர் ஒருவரால், அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட மருத்துவர் சமீன் சர்மாவை ஏற்பாடு செய்தவர் யார் என்பது தெரியவரவில்லை. ஜெயலலிதாவை பரிசோதித்த மருத்துவர் சமீன் சர்மா, அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்திருந்தார். ஆனால் அது கடைசி வரை செய்யப்படவில்லை. அது ஏன் என்று தெரிவிக்கப்படவில்லை. 2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்குள் சுமூகமாக உறவு இருந்திருக்கவில்லை.

எய்ம்ஸ் மருத்துவக் குழு 3 முறை அப்போல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தாலும், அவர்கள் ஜெயலலிதாவுக்கு முறைப்படி ஒரு முறை கூட சிகிச்சை அளிக்கவில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சசிகலாவின் உறவினர்களாலேயே அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவிடாமல் சசிகலா தடுத்துள்ளார். சசிகலா, ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம்.

ஜெயலலிதா இறந்த நேரம் 5.12.2016 இரவு 11.30 மணி என்று மருத்துவமனை கூறும் நிலையில், அதற்கு முந்தைய நாளான 4.12.2016 அன்று மதியம் 3-3:50க்குள் அவர் இறந்துவிட்டதாக சாட்சிகள் கூறுகின்றன. எனவே சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் ஆணையம் வர இயலாது.

எனவே ஆணைய விசாரணையின் அடிப்படையில் சகிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment