மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. பலமுறை ஆணையத்தின் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை எதுவும் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் ஆறுமுகச்சாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது . முதல் நாளில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 5 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்
அப்போது, 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் ஆகிய பிரச்னை இருந்தது என அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று, ஜெயலலிதா இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவருக்கு உயிரை காக்கும் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டதா? என்பது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அப்போலோ மருத்துவரிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது அப்பல்லோ மருத்துவர் மதன்குமார், ஜெயலலிதாவுக்கு 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்பு தான் அப்போது, ஜெயலலிதாவுக்கு உயிரை காப்பதற்கான அனைத்து சிகிச்சை முறையும் தரப்பட்டது என கூறினார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கும், சசிகலா உறவினர் இளவரசிக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க ஆறுமுகச்சாமி ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, இருவருக்கும் மார்ச் 21 ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் ஆஜராகுமாறு ஏற்கனவே ஓபிஎஸ்-க்கு 8 முறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், ஒரு முறை கூட ஓ பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை. தற்போது 9 ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil