ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்த வரையில், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Advertisment
ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த பெருமாள்சாமி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்றைய தினம் (20.12.18) ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து, சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் ரிட்சர்டு பீலே சிகிச்சை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவை சிகிச்சைக்காக ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை என்று ஆணையத்தில் விளக்கம் அளித்ததாகக் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்த வரையில், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என்றும் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அவரை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது குறித்து பேசப்பட்டது, என்ற தகவலை அவர் ஆணையத்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஆறுமுகசாமி ஆணையம் முன் மீண்டும் விசாரணைக்கு வரும் 3ம் தேதி ஆஜராக உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதே போல் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டபோது பல அமைச்சர்கள் அவரைப் பார்த்ததாக ராதாகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்