ஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமராக்களை அணைத்து வைத்திருந்தோம் - பிரதாப் ரெட்டி

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பிரிவில் எதிர்பாராத விதமாக சிசிடிவி கேமராவை அணைத்து வைத்திருந்தோம்

சென்னையில் இன்று அப்பல்லோ மருத்துவமனை சார்பாக புற்றுநோய் தொடர்பான நிகழ்வு நடந்தது. அதில் பங்கேற்ற அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் எதிர்பாராத விதமாக சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது என்று பிரதாப் ரெட்டி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இது குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஜெயலலிதா சிகிச்சை குறித்த கேள்விகளுக்கு பிரதாப் ரெட்டி பதிலளித்தார். அப்போது ஜெயலலிதாவை யார் யார் எல்லாம் சந்தித்தார்கள், என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு அவர் “அப்போலோவில் நோயாளியைப் பார்க்க அனைவரையும் அனுமதிப்பதில்லை. நோயாளியுடன் இருப்பவர்கள் யாரை அனுமதிக்கிறார்களோ அவர்கள் மட்டுமே அந்த நபரைப் பார்க்க இயலும். இது குறித்து விசாரணை ஆணையத்திடம் அனைத்து ஆவணங்களையும் நாங்கள் ஒப்படைத்துவிட்டோம். மேலும் ஜெயலலிதாவுக்கு நான் நேரடியாகச் சிகிச்சை அளிக்கவில்லை. அப்பல்லோ மருத்துவர்களும் வெளிநாட்டு மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர். முடிந்த வரை முயற்சித்தோம். ஆனாலும் அவர் இறந்துவிட்டார். ஜெயலலிதாவுக்கு உயர்தர சிகிச்சையே அளித்தொம்.” என்று கூறினார்.

மேலும் ஆதாரங்கள் குறித்து கேள்விகள் கேட்டபோது, “ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பிரிவில் எதிர்பாராத விதமாக சிசிடிவி கேமராவை அணைத்து வைத்திருந்தோம்” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

×Close
×Close