Advertisment

ஜெயலலிதா நினைவு தினம் : அப்பலோவில் 75 நாட்கள் ரீவைண்ட்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செப்டர்ம்பர் 22ம் தேதி அப்பலோவில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். அந்த 75 நாட்கள் திரும்பிப் பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sasikala Natarajan, Jayaram Jayalalithaa

Sasikala Natarajan, left standing, a close friend of India's Tamil Nadu state former Chief Minister Jayaram Jayalalithaa, wipes her tears next to Jayalalithaa's body wrapped in the national flag and kept for public viewing outside an auditorium in Chennai, India, Tuesday, Dec. 6, 2016. Jayalalithaa, the hugely popular south Indian actress who later turned to politics and became the highest elected official in the state of Tamil Nadu, died Monday. She was 68. (AP Photo/Aijaz Rahi)

அன்பரசன் ஞானமணி

Advertisment

போயஸ் கார்டன், வேதா நிலையம். 2016 செப்டம்பர் 22. இரவு 9.30 மணிவரை அந்தப் பகுதி, வழக்கமான கனத்த மௌனத்துடன், அமைதியாகத்தான் இருந்தது. இரவு 9.30-க்குப்பிறகு, அந்த அமைதி கலைந்தது. வேதா நிலையத்தில் இருந்து சீறிக்கிளம்பிய ஆம்புலன்ஸ், சென்னை, கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் போய்நின்றது. அதில், தமிழக முதலமைச்சர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்து சேர்ந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், ஒவ்வொரு நாளும் நடந்த செய்திகளின் தொகுப்புகளை இங்கே பார்க்கலாம்.

செப்டம்பர் 22

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செப்டம்பர் 23

செப்டம்பர் 22 - நள்ளிரவு 1 மணிக்கு, “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வுக்கு சிகிச்சை பெற அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்” என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

மேலும், 'இப்போது ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது, அவரது உடல்நிலை சீராக இருக்கிறது' என அப்போலோ கூறியது.

அதே 23-ஆம் தேதியன்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர், 'ஜெயலலிதா முற்றிலுமாக குணமடைந்து விட்டார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகலாம்' என்று சொன்னார்கள்.

செப்டம்பர் 24

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் தவித்தனர்; அமைச்சர்கள் அப்போலோவில் குவிந்தனர்; அதிகாரிகள் அப்போலோவைக் காவல் காத்தனர்; ஜெயலலிதா விரைவில் குணமடைய, எதிர்கட்சித் தலைவர்கள் வரிசையாக வாழ்த்துச் சொன்னார்கள். ஆனால், இவை அனைத்தையும் மங்கவைத்தது தி.மு.க தலைவர் கருணாநிதியின் அறிக்கை. செப்டம்பர் 24-ம் தேதி வெளியான அந்த அறிக்கையில், “முதல் அமைச்சர் ஜெயலலிதாவோடு கொள்கை அளவில் வேறுபட்டாலும், விரைவில் உடல்நலம் பெற்று பணியினைத் தொடர வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார் கருணாநிதி.

அப்போலோ மருத்துவமனைக்கு வெளியே பேட்டியளித்த சி.ஆர்.சரஸ்வதி, "முதல்வரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போகிறோம் என்ற தகவல் வெறும் வதந்தி. முதல்வர் உணவு சாப்பிட ஆரம்பித்துவிட்டார்" என்று கூறினார்.

செப்டம்பர் 25

செப்டம்பர் 24-ஆம் தேதியே, அதாவது, முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3-வது நாளிலேயே அவரது காய்ச்சல் குணமாகிவிட்டது. இப்போது அவர் அனைத்து உணவுகளையும் எடுத்துக் கொள்கிறார் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. செப்.,25 அன்று ஜெயலலிதாவை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் அப்போலோவிற்கு வந்து சென்றார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானது. செப்டம்பர் 25-ம் தேதி அறிவிப்பு வெளியானதும், ரத்தத்தின் ரத்தங்கள் யாருக்கு சீட்? எங்கே சீட்? என்று வேகம் காட்ட ஆரம்பித்தனர்.

செப்டம்பர் 25-ம் தேதி, அப்போலோ வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். அவர் வெளிநாடு செல்லத் தேவை இல்லை. தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

செப்டம்பர் 26

முதன்முறையாக ஜெயலலிதா தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. மாநகராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதோடு மட்டுமில்லாமல், அதற்குண்டான வேட்பாளர் பட்டியல் ஜெயலலிதாவின் கையெழுத்தோடு வெளியிடப்பட்டது.

"அப்போலோ மருத்துவமனையில் வைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணிநேரம் நடந்த அந்தக் கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக பேசப்பட்டது” என்று தமிழக அரசு சொன்னது. தமிழக அரசின் இந்தச் செய்திக்குறிப்பு வெளியானதும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், "முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தும் அளவுக்கு நலமாக இருக்கிறார் என்றால், அந்த ஆலோசனைக்கூட்டத்தின் போட்டோவை வெளியிட வேண்டியதுதானே” என்று கேள்வி எழுப்பினார்.

செப்டம்பர் 27

ஷீலா பாலகிருஷ்ணன் உட்பட உயரதிகாரிகளிடம் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தினார் என்ற அறிவிப்பும் வெளியானது.

செப்டம்பர் 28

ஜெயலலிதாவிடம் இருந்து நேரடியான இரண்டாவது அறிவிப்பு ஒன்று வெளியானது. அரசு ஊழியர்களின் போனஸ் குறித்து ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

செப்டம்பர் 29

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அப்போலோவிடம் இருந்து இரண்டாவது அறிக்கை வெளியானது. அதில், "ஜெயலலிதா இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

செப்டம்பர் 30

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமாக வதந்திகள் பரவத் தொடங்கியது. இதனால், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

மேலும், ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 'தமிழச்சி' என்ற பெயரில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதே நாளன்று, திமுக தலைவர் கருணாநிதி, "ஏன் ஆளுநர் கூட இன்னும் மருத்துவமனைக்கு வந்து பார்க்கவில்லை. இதனால், பல தரப்பிலும் பல சந்தேகங்கள் ஏற்படுகிறது. இந்த சந்தேகங்களுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

செப்.,30-ஆம் தேதி லண்டனில் இருந்து வந்திருந்த டாக்டர்.ரிச்சர்ட் பீலே, "முதல்வரின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை. ஆகையால், அவர் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

அக்டோபர் 1

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், அப்போலோ வந்தார். அரைமணிநேரம் அங்கிருந்தவர், “முதல்வர் உடல்நலம் தேறிவருகிறார். மருத்துவர்கள் அவருக்கு அளித்துவரும் சிகிச்சை திருப்திகரமாக உள்ளது’ என்று அறிக்கை வெளியிட்டார். ஜெயலலிதாவை அவர் நேரடியாக சந்தித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், ஆளுநர் தரப்பில் இருந்து, ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்ததாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இதே தினத்தன்று கருணாநிதியின் அறிக்கைக்கு அதிமுக சார்பில் பதில் அறிக்கை ஒன்று வெளியானது. அதாவது, "ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட மாட்டோம். மக்களுக்கு தான் நாங்கள் பதில் சொல்லவேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு அல்ல" என குறிப்பிட்டு இருந்தனர்.

அக்டோபர் 2

முதன்முதலாக அப்போலோவில் இருந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஒரு முழு அறிக்கை வெளியானது. அதில், "டாக்டர் ரிச்சர்ட் பீலேவின் ஆலோசனைப் படி, ஜெயலலிதா இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும். சிகிச்சைக்கு முதல்வர் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். இங்கேயே இருந்து அவர் அரசுப் பணியை மேற்கொள்வார்" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அக்டோபர் 3

அப்போலோவில் இருந்து அடுத்த அறிக்கை வெளியானது. அதில், "ஜெயலலிதாவின் சுவாசத்துக்கு ஆதரவளிக்கும் சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஜெயலலிதாவின் சுவாசித்திலேயே குறைபாடு இருந்தது அப்போதுதான் அனைவருக்கும் தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல், அக்.,3 தான் ரிச்சர்ட் பீலே லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

அக்டோபர் 4

சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு ஒன்று வெளியானது. அதில், "ஜெயலலிதா பொதுவான ஒரு மனிதர். மக்களின் முதல்வர். அதனால், அவரது உடல்நிலை குறித்து தெளிவான ஒரு விளக்கம் தர வேண்டும்" என கூறியிருந்தது. அன்றே, ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ அறிக்கை வெளியிட்டது.

அக்டோபர் 5

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வந்த ஒரு மருத்துவக் குழு, அப்போலோவில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரணை செய்தது.

அக்டோபர் 6

ஓரிரு நாட்கள் மட்டும் முதல்வர் மருத்துவனையில் இருந்து சிகிச்சை பெற்றால் போதும் என கூறிய அப்போலோ, அன்று விஷயத்தை மாற்றிச் சொன்னது. அதாவது, "முதல்வருக்கு சர்க்கரை அளவு பெருகிக் கொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், மூச்சுப் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதனால், நீண்ட நாட்கள் அவர் அப்போலோவில் இருந்தே சிகிச்சை பெறுவார்" என கூறியது.

அக்டோபர் 7

ஆளுநர் வித்யாசாகர் ராவ், மூத்த அமைச்சர்களான ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அப்போலோ வந்து ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டுச் சென்றார். ஆனால், ஜெயலலிதாவை நேரடியாக சந்திக்க மருத்துவர்கள் அவரை அனுமதிக்கவில்லை.

அக்டோபர் 8

அப்போலோ வெளியிட்ட அறிக்கையில், "ஜெயலலிதாவிற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்" என குறிப்பிட்டது.

இதுநாள் வரையில் ஜெயலலிதா உடல்நிலை சீராக இருக்கிறது என்று நினைத்திருந்த அனைவருக்கும், செயற்கை சுவாசம் என செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேநாளில், மு.க.ஸ்டாலின், அப்போலோவிற்கு நேரடியாகச் சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஓ.பி.எஸ் மற்றும் மூத்த அமைச்சர்களிடம் விசாரித்துவிட்டு சென்றார்.

அக்டோபர் 9

அப்போது மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு, அப்போலோவிற்கு வந்து, "ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். இப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்றார்.

அக்டோபர் 11

ஜெயலலிதாவின் உடல்நிலை காரணமாக அவர் கவனித்து வந்த இலாக்காக்கள், அப்போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது.

அக்டோபர் 12

பிஜேபி-யின் மூத்த தலைவர்களான அமித்ஷா மற்றும் அருண் ஜேட்லி அப்போலோவிற்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து சென்றனர்.

அக்டோபர் 13

மூன்றாவது முறையாக சென்னைக்கு வந்த ரிச்சர்ட் பீலேவுடன் இணைந்து, எய்ம்ஸ் மருத்துவர்களும் ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணிக்க ஆரம்பித்தனர்.

அக்டோபர் 15

சிங்கப்பூரில் இருந்து இரண்டு பெண் மருத்துவர்கள், ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக அப்போலோ வந்தனர்.

அக்டோபர் 16

அப்போலோவிற்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துச் சென்றார்.

அக்டோபர் 20

தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்டேட்ஸ் கொடுத்துவந்த சி.ஆர்.சரஸ்வதி, இன்று ஒரு முக்கியமான தகவலைச் சொன்னார். அதாவது, "இன்னும் 7 நாட்களில் ஜெயலலிதா வீடு திரும்புவார். அவர் முற்றிலும் குணமடைந்து விடுவார்" என்றார்.

அக்டோபர் 21

"நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஜெயலலிதாவின் உடல் தற்போது சீராகி இருப்பதாகவும், ஜெயலலிதா பேச ஆரம்பித்து இருப்பதாகவும்" அப்போலோ மருத்துவக் குழு தெரிவித்தது.

அக்டோபர் 22

இரண்டாவது முறையாக அப்போலோ வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஆனால், இந்த முறையும் ஜெயலலிதாவை, ஆளுநர் நேரடியாக சந்தித்தாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

அக்டோபர் 23

நான்காவது முறையாக டாக்டர் ரிச்சர்ட் பீலே அப்போலோ வந்தார். அன்று, கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டியும் அப்போலோ வந்து ஜெயலலிதா உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

அக்டோபர் 24

கம்யூனிஸ்ட் தலைவரான த.பாண்டியன் அப்போலோ வந்து மூத்த அமைச்சர்களிடம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிந்து சென்றார்.

அக்டோபர் 28

அதிமுக வேட்பாளர்கள் இடைத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த போது, ஜெயலலிதாவின் கையெழுத்திற்கு பதிலாக கைரேகை இடம் பெற்றிருந்தது சர்ச்சையானது.

அக்டோபர் 29

அன்று தீபாவளி!. வழக்கமான மகிழ்ச்சி அந்த தீபாவளியில் மிஸ் ஆகியிருந்தது. காரணம் ஜெயலலிதாவின் உடல்நிலை. அப்போலோவில் இருந்து அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அதிமுக அபிமானிகளும், ஜெயலலிதா மீது அன்பு கொண்ட பொதுமக்களும் வேண்டி அந்த தீபாவளியை கடந்தனர்.

நவம்பர் 1

அதிமுக தலைவர்களில் ஒருவரான பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, "ஜெயலலிதாவிற்கு ஃபிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்" என உறுதியளித்தார்.

நவம்பர் 2

ஜெயலலிதாவிற்கு ஃபிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவரால் கையெழுத்து போட முடியவில்லை. அதனால் தான் கைரேகை வைத்தார் என இடைத் தேர்தல் வேட்புமனு கைரேகை சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

நவம்பர் 4

அப்போலோ மருத்துவமனையின் இயக்குனர் பிரதாப் சி ரெட்டி செய்தியாளர்களிடம் பேசிய போது, "ஜெயலலிதா எப்போது விரும்புகிறாரோ, அப்போது அவர் வீட்டிற்கு செல்வார். அதுவரைக்கும் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வார்" என குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, "அவரது உடல்நிலையை கண்காணித்துக் கொண்டே இருக்கிறோம்" என்பதை மட்டுமே சொன்னார். வேறு எந்த தகவலையும் அவர் சொல்லவில்லை.

நவம்பர் 12

இரண்டாவது முறையாக பேட்டி கொடுத்த பிரதாப் சி ரெட்டி, "ஜெயலலிதாவிற்கு எப்போது சவுகர்யமாக இருக்கிறதோ, அதை அவரே முடிவு செய்து, சாதாரண வார்டுக்கு மாறுவது குறித்த தேதியை அறிவிப்பார். அதுவரை அவரது உடல்நிலை கண்காணிப்பிலேயே இருக்கும்" என கூறினார்.

நவம்பர் 13

ஜெயலலிதாவே எழுதியது என கடிதம் ஒன்று வெளியானது. அதில், "நான் குணமடைந்து கொண்டே வருகிறேன். மறு பிறவி எடுத்துள்ளேன். திரும்பவும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். அதிமுக தொண்டர்கள் அனைவரும் இடைத் தேர்தலுக்காக முழுவீச்சில் பாடுபட வேண்டும்" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நவம்பர் 14

அதிமுகவின் அமைப்புச் செயலாளரான விசாலாட்சி நெடுஞ்செழியனின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டார்.

நவம்பர் 18

மூன்றாவது முறையாக பேட்டிக் கொடுத்த பிரதாப் ரெட்டி, "ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார்" என்றார்.

நவம்பர் 19

ஜெயலலிதா பூரண குணமடைந்து இருப்பதால், தனி வார்டுக்கு மாற்றப்படுகிறார் என அப்போலோவில் இருந்து அறிவிப்பு வெளியானது.

நவம்பர் 22

இடைத் தேர்தலில் அதிமுக அடைந்த வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, "மக்கள் யார் பக்கம் உள்ளார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்கள். நான் குணமடைந்து வந்து மீண்டும் மக்கள் பணியாற்றுவேன்" என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது அந்தக் கடிதம்.

இதே நாளில், ஜெயலலிதாவின் பெயரில் இரண்டு அரசு அறிவிப்புகளும் வெளியானது.

நவம்பர் 24

பிரதமர் மோடி, தமிழக எம்.பி.க்களிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும், ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்ற வாழ்த்துச் செய்தியையும் அவர் தமிழக எம்.பி.க்களிடம் தெரிவித்தார்.

இதன்பிறகு, அனைத்தும் சுமூகமாக தான் சென்றுக் கொண்டிருந்தது. ஆனால்,

டிசம்பர் 4

அப்போலோ நிர்வாகம் அன்று வெளியிட்ட ஒரு அறிக்கை, அதிமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதில், "ஜெயலலிதாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அவருக்கு இதய செயல்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது.

இந்தச் செய்தியை அறிந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், அன்று நள்ளிரவு அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்து, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். தமிழகம் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.

டிசம்பர் 5

அன்று மாலை ஐந்து மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை உடனடியாக மறுத்த அப்போலோ நிர்வாகம், முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவே கூறியது.

ஆனால், அதன்பின் இறுதியாக ஒரு அறிவிப்பை வெளியிட்ட அப்போலோ நிர்வாகம், "முதல்வர் ஜெயலலிதா இரவு 11:30 மணியளவில் மாரடைப்பால் காலமாகிவிட்டார். அவரை காப்பாற்ற நாங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றிப் பெறவில்லை" என்று அறிவித்தது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment