ச.கோசல்ராம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் டிசம்பர் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி ஐஇதமிழ்டாட்காம் அவரது நினைவை போற்றும் வகையில் சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் ஆசோசியேசனின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு. அது எப்படி சாத்தியமானது என்பது குறித்து அவரே, குமுதம் வார இதழில் எழுதியுள்ளார். அந்த கட்டுரை உங்களுக்காக...
சின்ன வயதில் இருந்தே எனக்குக் கிரிக்கெட்டிலே இண்ட்ரெஸ்ட். மோகம். முடிஞ்ச வரைக்கும் டெஸ்ட் மேட்சுக்களை விடமாட்டேன். கொஞ்ச நாளா, மேட்சுக்களுக்கு வேண்டிய என்க்லோஷரிலே டிக்கெட் வாங்க கஷ்டமாகப் போச்சு. யோசித்தேன். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனில் நான் ஏன் ஒரு மெம்பராகக் கூடாதுன்னு... மெம்பரானால் ஆட்டமேட்டிக்காக எல்லா டெஸ்ட் மேட்சுக்களுக்கும் ரஞ்சி டிராபி மேட்சுக்கும் சேர்த்து டிக்கெட் வந்துவிடுமே. ப்ராப்ளமே இருக்காதேன்னு நினைச்ச்சேன்.
அப்போ வந்து ஒவ்வொரு கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் வரும் போதும், டிக்கெட்டுக்கு ரொம்ப அலைச்சலாக இருந்தது. இவங்களைப் பிடிச்சு அவங்களைப் பிடிச்சு, லாஸ்ட் மினிட் வரைக்கும் ஓரே சஸ்பென்ஸாக இருந்தது. இதனாலேயே 73,74லிலேயே மெம்பர்ராகிவிடனும் என்று முடிவு பண்ணினேன். ஆனந்தராவ் எங்களுக்கு நல்ல பிரண்ட். அனுபவமிக்க நேர்முக வர்ணணையாளர். தாசப்பிரகாஷ் க்ரூப் ஓட்டல்களுக்கு மேனேஜராக இருக்கிறார்.
தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேசனிலும் அவருக்கு நல்ல செல்வாக்கு உண்டு. என்னுடைய கேசை அவங்க போர்டு மீட்டிங்கிலே இவர் ரெப்ரஸெண்ட் பண்ணியிருந்தார். ‘’இது வரைக்கும் எந்த லேடியையும் டி.என்.சிக்கு இண்டிப்பெண்டண்ட் மெம்பராகச் சேர்ந்துக் கொண்டது கிடையாது. எ மேன் பிகம்ஸ் எ மெம்பர். அவருடைய டிக்கெட்டிலே அவரது மனைவியோ, பெண்ணோ உறவுகாரங்களோ வரலாம். தவிர தனிப்பட்ட முறையிலே பெண் மெம்பர்கள் சேர்க்கிற வழக்கம் கிடையாது’’ என சொல்லிவிட்டார்கள்.
மிஸ்டர் ஆனந்த்ராவ் இதை என்கிட்ட சொன்னார். நான் திரும்பி அவர்கிட்டே சொன்னேன். ‘’அடுத்த மீட்டிங்க்லே இதைக் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்க. எங்க அப்பா எனக்கு ஒரு வயசு இருக்கும் போது இறந்துவிட்டார். எனக்கு கல்யாணம் ஆகலை. மெம்பர்ஷிப் எனக்குக் கிடைக்கனும்கிறதுக்காக இறந்து போன எங்க அப்பாவை மீண்டும் எழுந்து வரச் செய்ய முடியாது. இதுக்காக நான் போய் ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க்க முடியாது. எனக்கு அப்பாவோ கணவரோ இப்போ இல்லைங்கிறதுக்காக, எனக்கு மெம்பர்ஷிப் தரமாட்டோம்னு எப்படி நீங்க சொல்ல முடியும்?’’
அடுத்த மீட்டிங்கிலே ஆனந்தராவ் நான் சொன்னபடியே என் கேஸை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இதுக்கு அவங்களாலே பதில் சொல்ல முடியவில்லை. என்னை அவங்க அசோசியேஷனில் மெம்பராகச் சேர்த்துக் கொண்டாங்க. நான் பேட்ரன் மெம்பராகச் சேர்ந்தேன். இன்சிடெண்டல்லி, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனிலே இண்டிபெண்ட்ண்ட் மெம்பராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட முதல் பெண்மணி நான் தான். அவங்க மெம்பர்ஷிப் ரோலிலிலே ‘மிஸ் ஜெயலலிதா ஜெயராம்’னு என் பெயர் இருக்கு. ஆட்டோமேடிக்காக டெஸ்ட் மேட்சுக்கள் எல்லாதுக்கும் டிக்கெட் வந்துடும். பெவிலியனிலிலே சீட் போட்டிருப்பாங்க. அதைத் தவிர எனக்கு என்ன வேண்டும்னா இரண்டு கெஸ்ட் டிக்கெட்டுகள் வாங்கிக்கலாம். அந்த இரண்டு டிக்கெட்டுகளுக்கும் என் சீட்டுக்கு இடப்பக்கமாக கொடுப்பாங்க. எனக்கு அப்புறம் இண்ட்டிபெண்டண்ட் லேடி மெம்பர் இருக்காங்களானு எனக்குத் தெரியாது.