J Jayalalithaa Coimbatore temple : கோவையில் கடவுளாக மாறிப் போயுள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவருக்காக 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் சிலை எழுப்பி தினமும் வழிபாடு நடத்தி வருகிறார்கள் அதிமுக தொண்ட்ர்கள்.
கோவை மாநகராட்சி 100வது வார்டு, கணேசபுரம் பகுதியில் மூரண்டம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இங்கு தான் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையிலான தொண்டர்கள் ஒரு கோயிலை அமைத்துள்ளனர். அருள்மிகு ஈசப்பன், காலபைரவர் ஆஞ்சநேயர் திருக்கோயில் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் கோயிலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
சுவாமி சிலைகளோடு சேர்த்து ஜெயலலிதா உருவப்படமும் செதுக்கப்பட்டுள்ளது. 8 டன் எடை கொண்ட ஒரு கல்லில் ஒருபுறம் காலபைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமி சிலைகளும், மறுபுறம் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் பங்கு இன்றியமையாதது ஆகும். அவரின் இடத்தை இப்போது வரை நிரப்ப யாருமில்லை என்பதே அதிமுக தொண்டர்களின் குரல்களாக உள்ளது. இந்நிலையில் கோவையில் அவருக்கு சிலை வைத்து கடவுள் போல் வழிப்பட்டு வருகிறார்கள் தொண்டர்கள்.
சிலையின் சிறப்பு:
சிலையில், `அம்மா யோக மையம்' என்றும், `ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டது' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.8 டன் கொண்ட ஒரே கல்லில் ஜெயலலிதாவுக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி காலையும், மாலையும் ஜெயலலிதாவிற்கு கற்பூரம் காட்டி வழிபாடு நடத்தி கொண்டிருக்கின்றனர் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்.கடந்த சில நாள்களுக்கு முன்னர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த கோயிலை திறந்து வைத்தார்.
இந்த சிலை வடிவமைக்க மொத்தம் 5 லட்சம் செலவாகியதாகி உள்ளது அனைவரும் ஒரு சேர நிதி திரட்டி இந்த சிலையை ஜெயலலிதாவிற்காக வடிவமைத்துள்ளனர்.