தமிழகத்தில் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை அ.தி.மு.கவின் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச்சுகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட 66 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் இதுதொடர்பான வழக்குகள் நடந்து வந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி கர்நாடக சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
சிபிஐ சிறப்பு கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ தீபா, தீபக் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்தது.
அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் பிப்ரவரி 14 காலை 11 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 481 வகையான நகைகள் இருக்கிறது. இதில் மதியம் 2 மணி வரை 150 நகைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. நகைகளை ஆய்வு செய்யும் பணிகள் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
மொத்தமுள்ள 481 வகையான நகைகளில், 290 நகைகளின் எடையளவு மதிப்பீட்டு பணி நிறைவு பெற்றது. மதிப்பீடு செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் தமிழக அரசிடம் நீதிபதி மோகன் முன்னிலையில் கர்நாடக கருவூல அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அந்த 290 நகைகளையும் தமிழக அதிகாரிகள், தாங்கள் கொண்டு வந்த 3 இரும்பு பெட்டிகளில் பத்திரமாக வைத்தனர். பின்னர் அந்த பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு விதானசவுதாவில் உள்ள கருவூலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது.
அதுபோல் மீதியுள்ள 191 நகைகளும் கர்நாடக கருவூல அலுலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பிப்ரவரி 15 காலை 11 மணிக்கு எடை போடப்பட்ட நகைகளையும், மதிப்பீடு செய்ய வேண்டிய நகைகளையும் பலத்த பாதுகாப்புடன் விதானசவுதாவில் இருந்து மீண்டும் கோர்ட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.
மீதமுள்ள நகைகள் நீதிபதி முன்னிலையில் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த பணிகள் முடிவடைந்து 4 கன நகைகளும் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் நிலத்திற்கான நில ஆவணங்களை இன்று தமிழக அரசிடம் நீதிபதி மோகன் ஒப்படைக்க உள்ளார்.