முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5 ஆம் தேதி அரசு சார்பில் அனுசரிக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் குமரவேல் தாக்கல் செய்த மனுவில், 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். அதன் பிறகு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதித்த போதே இறந்த நிலையில் அனுமதிக்கபட்டாரா? அல்லது சிகிச்சையின் போது எப்போது இறந்தாரா? என ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் எழுப்பிய சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது நடைபெற்ற இடைதேர்தலில் கட்சி சின்னம் வழங்குவது தொடர்பான படிவத்தில் அவர் சுய நினைவுடன் தான் கைரேகை வைத்தாரா? என வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சந்தேகங்கள் அனைத்தும் விசாரணை முடிவடைந்து அறிக்கை தாக்கல் செய்யும் போது தான் ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்து விவரங்கள் தெரியவரும்.
எனவே டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க கூடாது எனவும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள அரசுக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார். அதற்கு முன்னதாக நீதிபதிகள் சிவஞானம் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கறிஞர் துரைசாமி முறையிட்டார். முறையீட்டை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்த்தினர்.