சென்னை சிவில் நீதிமன்றத்தில் ரூ.67.9 கோடி டெபாசிட் செய்ததன் மூலம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தின் ஒற்றை உரிமைதாரராக தமிழக அரசு மாறியுள்ளது. இதுதொடர்பாக, நேற்று சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்," நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை சட்டத்தின் கீழ், போயஸ் தோட்ட மதிப்பு 29.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தீபா, தீபக் ஆகியோருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொடகை, வருமான வரித்துறையினருக்கு செலுத்த வேண்டிய பாக்கி என மொத்தம் ரூ.67.9 கோடி முன்பணம் செலுத்தப்பட்டது" என்று தெரிவித்தது.
Advertisment
இதன்விளைவாக, போயஸ் தோட்ட இல்லத்தை வருமானவரித் துறை உரிமை கோர முடியாத சூழல் தற்போது உருவாகியிள்ளது.
ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு தீபா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நினைவில்லமாக மாற்றுவதற்கு முன் செலுத்த வேண்டிய பாக்கி பணத்தை செலுத்துமாறு வருமானவரித் துறை தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக அதிமுகவை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் , போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும், எஞ்சிய பகுதிகளை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறித்தியது . இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, சகோதரர் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்றும் இந்த வழக்கில் அறிவிக்கப்பட்டன. வழக்கில் மூன்றாவது மனுதாரராக சேர்த்துக் கொள்ளப்பட்ட வருமான வரித்துறை, போயஸ் தோட்ட இல்லம் தொடர்பாக 40 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி இருப்பதாகவும் தெரிவித்தது.
Advertisment
Advertisements
முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவு இல்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. ‘வேதா நிலையம்’ இல்லத்தில் உள்ள மரச்சாமான்கள், புத்தகங்கள், நகைகள் உள்ளிட்டவை கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே, கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடையும் வரை, அங்குள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை அதன் பராமரிப்புக்காக அரசுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதனால், அந்த இல்லம், மற்றும் அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசுடைமையாக்கவும், ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ அமைக்கவும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசர சட்டத்தைப் பிறப்பித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil