ஜெயலலிதா வீடியோ உண்மைத்தன்மை குறித்து திமுக செய்தி தொடர்பாளரும் மூத்த வக்கீலுமான கேஎஸ்ராதாகிருஷ்ணன் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை கடந்த ஓராண்டாகவே நிலவி வருகிறது. அவரது மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை டிடிவி.ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோவை வெளியிட்டார்.
இது பல்வேறு சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இப்போது ஏன் வெளியிட்டார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ உண்மையானதுதானா என்ற சர்சை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் இந்த வீடியோ பற்றி கேட்ட போது, ‘இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் எடுத்திருக்கலாம்’ என பதில் சொல்லியுள்ளது.
இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளரும் மூத்த வக்கீலுமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர், ‘ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சி சித்தரிக்கப்பட்ட காணொளி ஒன்று ஊடகத்தில் உலா வருவதை கண்டேன். என்னால் உறுதியாக சொல்ல முடியும்.இதில் சில சந்தேகங்கள் உள்ளன.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அதே CCU வில் தான் எனது மனைவியாரும் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இலண்டன் டாக்டர் பீலேவை தவிர அதே மருத்துவக்குழு சார்ந்த சில மருத்துவர்கள் 2014ல் என் மனைவிக்கும் சிகிச்சை அளித்தது. நானும் சில மாதக்கணக்கில் அங்கு சென்று வந்துள்ளேன். ஜன்னல் திரை சீலைகள் உண்டு. மேலும் ஜன்னல் வழியே தென்னை மரங்கள் தெரிகின்றன. அப்பலோ CCU க்கு வெளியே தென்னை மரங்கள் கிடையாது. இது தவறான காணொளிக் காட்சியா என சந்தேகங்கள ஏற்படுகின்றன.
.......
ஜெயலலிதா மறைந்த பிறகு அப்போலோவில் அவரது அறை. ஒப்பிடுக'
இவ்வாறு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.