ஜெயலலிதா 71வது பிறந்தநாள் : அம்மா என்றும் அன்புச் சகோதரி என்றும் லட்சக்கணக்கான மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் செல்வி ஜெயலலிதா. தமிழகத்தின் முதல்வராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து பின்பு காலமான ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாள் இன்று.
ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் அதிமுக கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ராமச்சந்திரனுடன் மட்டும் 28 படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி முன்னணி நடிகையாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜெயலலிதா.
1980ல், எம்.ஜி.ஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ஜெயலலிதா. கொள்கைப்பரப்பு செயலாளராகவும், சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும், ராஜ்யசபை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.
எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த அவர், தனி மனுஷியாக கட்சியை வலிமைப்படுத்தி அதன் தலைமைப் பொறுப்பை வகுத்தார். 1991,2001,2011,2016 வருடங்கள் நடைபெற்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றவர் அவர்.
ஜெயலலிதா 71வது பிறந்தநாள் - தமிழகமெங்கும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டம்
6 முறை தமிழக முதல்வராக பணியாற்றியுள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக 29 வருடங்கள் இருந்துள்ளார். 2016ம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிட்டது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அதிமுக மற்றும் அமமுக சார்பில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களும், நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்த விவசாயிகளுக்கான 2000 ரூபாய் திட்டத்தை செயல்படுத்த முடிவு. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 24ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தமிழகமெங்கும் பொதுக்கூட்டங்கள் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.
முதல்வர் அஞ்சலி
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு மினி மாரத்தான் நடைபெற்றது. இதனை அத்தொகுதி எம்.பி. சுந்தரம் துவங்கிவைத்தார். இன்று மாலை நடைபெறும் நிகழ்வில் 2 ஆண்டு கால சாதனை விளக்கக் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் 71 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
71வது பிறந்த நாளையொட்டி 71 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டினர்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரை ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ் இணைந்து வெளியிட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/D0JRE76VYAAkR5G-1024x768.jpg)
ஜெயலலிதா 71வது பிறந்தநாள் விழா ஒத்திவைப்பு
விழுப்புரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மரணமடைந்ததை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற இருந்த ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.