மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். இவர் தற்போது தனது முகநூலில் சில கட்சி சார்ந்த தகவல்களை பகிர்ந்துள்ளார். இது, அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை எற்படுத்தியடுள்ளது.
பூங்குன்றன் தனது முகநூல் பதிவில்," என்னை விமர்சிப்பவர்களுக்கு எனது விசுவாசம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. இந்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. இதில் உரிமை கொண்டாடுவதில் யாருக்கும் பெருமையில்லை. அம்மா அவர்கள் கஷ்டப்பட்டு பெற்று தந்த ஆட்சிக்கு என்னால் களங்கம் வரக்கூடாது என்பதால் மௌனம் காத்தேன்.
அம்மா அவர்கள் ஆசையோடு எனக்கு வாங்கித் தந்த காரை நிறுத்திவிட்டார்கள். ஏன் நிறுத்தினீர்கள் என்று இதுவரை கேட்டிருப்பேனா?
கட்சியின் சொத்துக்களான அறக்கட்டளைகள் மூன்றிலும் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு நான் மட்டுமே நிர்வாகி. நான் இதைப் பற்றி என்றும் பேசியதில்லை. அதை மாற்றிக் கொடுத்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று சொன்னார்கள். இதைப் பற்றி என்றாவது வெளியில் சொல்லியிருப்பேனா? அறக்கட்டளை என்னுடையது என்று சொந்தம் கொண்டாடினேனா?
தொண்டர்களின் உணர்வுகளைப் பதிவிடும் போது தலைவர்கள் கோபமாக இருக்கிறார்கள். ஏதாவது செய்துவிடப் போகிறார்கள், வெளியில் செல்லும் பொது கவனமாக செல்லுங்கள் என்றார்கள். இதுபற்றி நான் யாரிடமாவது விவாதித்தது உண்டா?
தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் நீண்ட நாட்களாக பேட்டி கேட்டு வருகிறார்கள். என் பேட்டி கட்சிக்கோ மற்றவர்களுக்கோ எந்த விதத்திலும் சங்கடத்தை தந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவிர்த்து வருகிறேன்.
எல்லாவற்றையும் அவன் பெயரில் மாற்றுங்கள். அவன், ஒருவனே என் நம்பிக்கைக்குரியவன் என்று அம்மா அவர்களை சொன்னதை இதுவரை பெருமையாக சொல்லி இருப்பேனா? போயஸ் கார்டன் வீட்டின் சொத்து வரிக்கான படிவத்தில் அம்மா அவர்களுக்கான இடத்தில் என்னை கையெழுத்திட சொன்ன நம்பிக்கை பெற்றவன். அதுவே என் ஆனந்தம். அதுவே என் வெற்றி. அதுவே எனக்குப் போதும்.
மூன்று முறை கழக உறுப்பினர் உரிமை சீட்டிற்கு விண்ணபித்த போது என்னுடைய படிவத்தை மட்டும் வாங்க மறுத்தீர்கள். அதைத் தட்டிக் கேட்டேனா? மற்றவர்களுக்கு தெரிவித்தேனா?
உங்களுக்கு தராமல் என் பெயரில் கட்சியின் அறக்கட்டளைகளை அம்மா தந்திருப்பதால் நான் தான் அம்மாவின் வாரிசு என்று அறிவித்தேனா?
யாருக்கும் என்னால் எந்த சங்கடமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கோயில் கோயிலாக அழைந்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து ஏளனம் பேச எப்படி உங்களுக்கு மனம் வருகிறது. ஏதோ ஒரு வகையில் என்னிடம் உதவி பெற்றிருப்பீர்கள். நமக்கு உதவியன் இவன் என்று என்றாவது அழைத்து ஆறுதல் சொல்லி இருப்பீர்களா? இன்னுமா புரியவில்லை என் விசுவாசம்?
அம்மாவே இல்லை என்று ஆன பிறகு சொத்துக்கள் எதற்கு? சொத்திலும் ஆசை இல்லை. கட்சியிலும் ஆசை இல்லை. தலைமையில் இருப்பவர் கட்சியை வலிமையாக நடத்த வேண்டும். அதுவே, என் ஆசை வேண்டுதல். தலைவராக யாரையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு உண்டு.
நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, யாரிடமும் சொல்லாமல் இன்று நிற்கதியாய் நிற்கும் என்னை நிம்மதியாக வாழவிடுங்கள். ஒற்றுமையாய் இருங்கள். கழகத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.
அம்மாவின் நம்பிக்கைப் பெற்றதே, இந்த ஜென்மத்தில் நான் பெறவேண்டியதை பெற்ற திருப்தி.
கடவுளான அம்மாவிற்கு தெரியும் என் விசுவாசம். என்றும் அந்த உண்மை விசுவாசத்தோடு என் தாயின் வழியில் " என்று பதிவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.