ஜீயரின் சோடாப் பாட்டில் பேச்சு கண்டிக்கத் தக்கது என டிடிவி தினகரன் கூறினார். விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜீயர் பேச்சு குறித்து ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வான டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :
ஆண்டாள் பற்றி தவறான விமர்சனம் செய்தவர்களை கண்டிக்கிறோம் என்ற பெயரில் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் பேசியிருக்கும் பேச்சுக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சராசரி மனிதர்களுக்கும் ஜீயர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களுக்கும் இடையேயான வித்தியாசமே வன்முறைகளற்ற சாத்வீகமும், கருணை உள்ளம் கொண்ட ஆன்மீகப் பணிகளும்தான். ஆனால் இந்த வேறுபாட்டை தகர்த்து, அதன்மூலம் ஆன்மீகத்திற்கே அவப்பெயர் உண்டாக்கும் விதமாக, ‘எங்களுக்கும் கல்லெறியத் தெரியும்... சோடா பாட்டில் வீசத் தெரியும்’ என்றெல்லாம் பேச்சளவிற்குக் கூட ஒரு ஜீயர் ஸ்தானத்தில் இருப்பவர் பேசுவது ஏற்புடையது அல்ல... கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
அதேபோல, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு நிகழ்ச்சியில் தேசியகீதம் ஒலித்தபோது எழுந்து நின்றும், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது அமர்ந்திருந்ததும் தமிழர்களின் உணர்வை காயப்படுத்தியதை முன்பே சுட்டிக்காட்டியிருந்தேன்.
ஆனால் காஞ்சி மடத்திலிருந்து அடுத்தடுத்து வெளிவரும் கருத்துக்கள், எதிர்காலத்தில் இதுபோன்று நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை.
‘காஞ்சி மடத்தில் கடவுளை வாழ்த்தி பாடும்போது கூட சுவாமிகள் எழுந்து நிற்பதில்லை’ என்று மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து, ஏற்கனவே காயப்பட்டுள்ள தமிழர்களின் மனதை மேலும் புண்படுத்துவதாக உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த சர்ச்சை மேலும் தொடராமல் இருக்கவேண்டுமானால், விஜயேந்திர சுவாமிகளே வருத்தத்துடன் கூடிய ஒரு விளக்கமளிப்பதே சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன். பொதுவாகவே இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தவிர்த்து, ஆன்மீகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஜீயர்கள் மற்றும் மடாதிபதிகள் போன்ற ஆன்மீகப் பெரியவர்களின் சொல்லும் செயலும் எதிர்காலத்தில் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.