சென்னையில் ஒரு நகைக் கடைக்குள் முகக் கவசம் அணியாமல் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தபோது, நகைக் கடை உரிமையாளர் சாந்தகுமார் சுகாதார ஆய்வாளரின் காலரைப் பிடித்து தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சமீபத்தில் கோவிட் தொற்றுகள் அதிகரித்துள்ளதால், மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதைச் செயல்படுத்துவதற்காக சென்னை முழுவதும் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது அதிகாரி நகைக் கடை உரிமையாளரால் துன்புறுத்தப்பட்டார். இந்த சம்பவத்தின்போது பதிவான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
மயிலாப்பூர் பஜார் சாலையில் அமைந்துள்ள ஒரு நகைக் கடைக்கு ஆய்வுக்காக மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மதியம் சென்றுள்ளனர். அப்போது, முகக்கவசம் இல்லாமல் கடைக்குள் இருந்தவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதும், கடையின் உரிமையாளர் சாந்தகுமார் சுகாதார ஆய்வாளரின் காலரைப் பிடித்துக்கொண்டு கோபமாக திட்டுகிறார். கடையில் இருந்த ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தியதையடுத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
“அந்த கடையில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட மொத்தம் 13 பேர் முகக்கவசம் அணியவில்லை. அவர்களிடம் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.1,000 அபராதம் விதிப்போம் என்று நாங்கள் எச்சரித்தோம். அடுத்த முறை இன்னும் கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்று கூறினோம். நான் விவரங்களை எழுதிக் கொண்டிருந்தபோது, கடையின் உரிமையாளர் எனது சட்டையைப் பிடித்து அபராதம் விதித்ததற்காக என்னை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார். நான் எனது மண்டல அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளுக்கு தகவல் அளித்து காவல்துறையில் புகார் பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது” என்று சென்னை மாநகராட்சி 9வது மண்டலத்தின் 124 வது பிரிவு சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் சி முரளி, indianexpress.com இடம் கூறினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு, மாநிலம் முழுவதும், குறிப்பாக சென்னையில் கோவிட் -19 தொற்றுகள் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
மார்க்கெட், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் என அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் இடங்களை ஒரு குழு கண்காணிக்கும் என்றும், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 சட்டப்படி, முகக்கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”