Advertisment

கோடிக்கணக்கான தங்க நகைகளுடன் ஜுவல்லரி உரிமையாளர் மனைவியுடன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு

திருச்சியில் கோடிக்கணக்கான தங்க நகைகளுடன் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மனைவியுடன் தலைமறைவானதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

author-image
WebDesk
Oct 20, 2023 21:54 IST
New Update
jewelry

கோடிக்கணக்கான தங்க நகைகளுடன் ஜுவல்லரி உரிமையாளர் மனைவியுடன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு

திருச்சியில் கோடிக்கணக்கான தங்க நகைகளுடன் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மனைவியுடன் தலைமறைவானதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisment

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை இயங்கி வந்தது. திருச்சியை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக இருந்து  இதனை நடத்தி வருகின்றனா். இதன் நிர்வாகத்தினர் தங்களது நகைக்கடையில் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என அறிவித்ததோடு ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்குவதோடு, 10 மாத முடிவில் 106 கிராம் தங்கம் வழங்குவதாக அறிவித்தனர். 

இந்த நகைக் கடைகளின் விளம்பர தூதுவர்களாக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகைகள்  ராதிகா, சைத்ரா ரெட்டி ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பிய மக்கள் இந்த நகை கடையில் லட்சக்கணக்கிலும் , நகை சீட்டிலும்   முதலீடு செய்தனர். அந்தவகையில் ரூ.100 கோடி வரை முதலீடு பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான முதிர்வு  காலம் முடிந்த பிறகு அந்தத் தொகையை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. 

இதனால், புதுச்சேரி மற்றும் திருச்சியில் உள்ள பிரணவ் ஜுவல்லரி நகைக் கடைகளை வாடிக்கையாளா்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து  போலீசில் புகாா் அளிக்குமாறு அவா்களை  போலீசாா் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் 500-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகார்களின் அடிப்படையிலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்யபிரியா உத்தரவின்பேரிலும் திருச்சி, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 11 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். திருச்சியில் மட்டும் 5 இடங்களில் சோதனை நடந்தது. திருச்சி- கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஜூவல்லரி மற்றும் கோகினூர் தியேட்டர் பகுதியில் உள்ள மெயின் கடையிலும்  சோதனை நடத்தப்பட்டது. 

இந்த 2 கடைகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் 9 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டது. ஆனால் தங்க நகை 6 பவுன் மட்டுமே கிடைத்துள்ளதாக பொருளாதார  குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். கடைகளில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் எங்கே போனது?, மோசடி கும்பல் முன்கூட்டியே அவற்றை பதுக்கி விட்டார்களா? என்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், திருச்சி பாபுரோடு பகுதியில் ஜூவல்லரி உரிமையாளர் மதனின் தந்தை வீடு மற்றும் ஐயப்பன் கோவில் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட்  வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அதில் எதுவும் சிக்கவில்லை. உறையூர் லிங்க நகரில் உள்ள பிரணவ் ஜூவல்லரி மேலாளர் நாராயணன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.50 ஆயிரம் மட்டுமே சிக்கியது. கும்பகோணத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் வெள்ளி நகைகள் மட்டுமே கிடைத்துள்ளது.

இதற்கிடையே திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது ஆசைவார்த்தை கூறி மோசடி செய்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி செய்தல் என்பன உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் மேலாளர் நாராயணனை நேற்று ( 19.10.2023 ) இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உரிமையாளர் மதன் தனது மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். 

அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைதான நாராயணனை மதுரையில் உள்ள முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். உரிமையாளர் மதன் பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற பத்திரப்பதிவுத்துறை உதவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நாடி உள்ளனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment