'காலா’ பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததால், அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து அவர்களை நோக்கி சீண்டல்கள் தொடர்கின்றன. அதிமுக.வை பொறுத்தவரை கமல்ஹாசனை மட்டுமே நேரடியாக டார்கெட் செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம், அவர் மட்டுமே அதிமுக அரசை காரசாரமாக சாடுகிறார்.
ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்காத காரணத்தால், விமர்சனங்களை அடக்கியே வாசிக்கிறார். எனவே அவரது ஆன்மீக அரசியலை விமர்சிக்கும் சில கட்சிகளைத் தவிர, முக்கிய கட்சிகள் ரஜினிகாந்த் பற்றி அதிகம் விமர்சிப்பதில்லை. ஆனால் திடுதிப்பென ரஜினிகாந்த் மீது பாய்ச்சல் நடத்தியிருக்கிறது அதிமுக!
ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் 9 பாடல்களை இன்று (மே 9) காலையில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் போராட்டத்தை வலியுறுத்தும் விதமான வரிகள் அதிகம் இருக்கின்றன.
காலா பாடல்கள் குறித்து அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது. ‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்’ என்றார் ஜெயகுமார்.