அமைச்சர் ஜெயகுமார் இன்று சட்டசபையில் கலகலப்புடன் பேசினார். ‘நண்டுக்கு நடுங்க மாட்டேன். சிங்கம்-புலியை பார்த்தவன் நான்’ என்றார் ஜெயகுமார்.
அமைச்சர் ஜெயகுமார், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இதே ஏரியாவில் கடல் அரிப்பு காரணமாக மீனவர்களின் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது.
அது தொடர்பாக நடவடிக்கை கோரி அமைச்சர் ஜெயகுமார் வீடு முன்பு சிலர் நண்டு விடும் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடந்த விவாதத்திற்கு இடையே இதை குறிப்பிட்ட அமைச்சர் ஜெயகுமார், ‘என் வீட்டு முன்பு நண்டு விடும் போராட்டம் நடத்துகிறார்கள். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். சிங்கம், புலி, பூரான், பல்லி அனைத்தையும் பார்த்தவன் நான். சிங்கம்-புலியுடன் வாழ்ந்தவன்’ என்றார்.
ஜெயகுமார் இப்படி பேசியபோது திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, ‘ஜெயகுமார் 2002-ல் வனத்துறை அமைச்சராக இருந்தபோது தேனியில் சிங்கம்-புலியை பார்த்தார்’ என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.