ஜெயலலிதா 70-வது பிறந்தநாள் விழா : ஜெ. சிலையை இபிஎஸ், ஓபிஎஸ் திறந்து வைத்தனர்

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று நடக்கின்றன. அதிமுக.வினரும் டிடிவி தினகரன் அணியினரும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று நடக்கின்றன. அதிமுக.வினரும் டிடிவி தினகரன் அணியினரும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா, கடந்த 30 ஆண்டு தமிழக அரசியலில் மையமாக திகழ்ந்தவர்! அரசியலில் மிக அதிக விமர்சனங்களையும், அதே அளவு புகழ் வெளிச்சத்தையும் ஒருங்கே பெற்ற தலைவர் ஜெயலலிதா. அவரது மரணமும்கூட சர்ச்சை ஆகி, அரசியலை இன்னமும் சூடாக்கிக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் சாதாரண மக்கள் மற்றும் பெண்களை முன்னிறுத்தி செயல்படுத்திய சில திட்டங்கள் இன்றும் பேசப்படுகின்றன. அந்த வகையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதாரண மக்களின் அன்பைப் பெற்றவராக அவர் இருந்தார். எனவே இன்று அவரது பிறந்த நாள் கட்சிக்கு அப்பாற்பட்டும் நினைவு கூரப்படுகிறது.

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினமான இன்று, அதையொட்டி நடைபெறும் நிகழ்வுகளின் LIVE UPDATES இங்கே..!

பகல் 1.00 : ‘ஜெயலலிதா என்பது வெறும் சொல் அல்ல, அரசியல் களத்தில் ஆச்சரியங்களை ஏற்படுத்திய ஆற்றலின் சக்தி. அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு அஞ்சாத சிங்கமாக திகழ்ந்தவர் ஜெயலலிதா’ என டிடிவி தினகரன் புகழாரம் சூட்டினார்.

பகல் 11.45 :‘இந்த அதிமுக ஆட்சியை நடத்துவது ஜெயலலிதா! கட்சியை நடத்துவது தொண்டர்கள்! அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அவற்றால் பலன் இருக்காது’ என துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.

காலை 11.30 : ஜெயலலிதாவின் ஆசி, இந்த ஆட்சியை பாதுகாத்து வருவதாகவும், இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.

காலை 11.25 : ஜெயலலிதா சிலை திறப்பைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

பகல் 11.15 : அதிமுக.வின் அதிகாரபூர்வ நாளேடாக, நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

பகல் 11.15 : ஜெயலலிதா சிலைக்கு ரோஜா மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. சிலை திறக்கப்பட்டதும், நிர்வாகிகள் அனைவரும் கைகூப்பி வணங்கினர்.

jeyalalitha statue opening

ஜெயலலிதா சிலை திறப்பு விழாவையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட கூட்டம்

காலை 11.10 : ஜெயலலிதா இரட்டை விரல்களை காட்டியபடி நிற்கும் முழு உருவ வெண்கலச் சிலையை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். இருவரும் பொத்தானை அழுத்தியதும், சிலையை மூடியிருந்த துணி விலகியது.

காலை 11.00 : முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி க.பழனிசாமி, தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார். அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதா சிலையை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் திறந்து வைக்க இருக்கிறார்கள்.

காலை 10.45 : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வந்து சேர்ந்தார். சற்று நேரத்தில் ஜெயலலிதா சிலை திறக்கப்பட இருக்கிறது. அமைச்சர்களும், அதிமுக மூத்த நிர்வாகிகளும் வந்து சேர்ந்துவிட்டனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதல்வருமான எடப்பாடி க.பழனிசாமியின் வருகைக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

காலை 10.00 : ஜெயலலிதா சிலை திறப்பு விழாவையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கூட ஆரம்பித்திருக்கிறார்கள். அதிமுக.வின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது புரட்சித் தலைவி அம்மா’வின் முதல் பக்கத்தை கட்சிப் பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

காலை 9.30 : நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார். அரசியல் ரீதியாக ஜெயலலிதாவை எப்போதுமே விரும்பாவிட்டாலும், ஆணாதிக்க உலகில் ஒரு பெண்மணியாக அவரது ஆளுமையை நினைவு கூர்வதாக கூறியிருக்கிறார் அவர்.

காலை 8.35 : டிடிவி தினகரன் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று மாலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார்.

காலை 8.30 : இன்று மாலை 6 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

காலை 8.00 : ஜெயலலிதா 70-வது பிறந்த தின விழாவின் முக்கிய அம்சமாக இன்று காலை 10.50 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி க.பழனிசாமி ஆகியோர் சிலையை திறந்து வைக்கிறார்கள். அதிமுக.வின் அதிகாரபூர்வ நாளேடாக ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ வெளியிடப்படுகிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close