ஜெயலலிதாவை அம்மா எனக் கூறும் அம்ருதா, சோபன்பாபுவை தனது தந்தை என ஏன் உரிமை கோரவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பெங்களூருவை சேர்ந்தவர் அம்ருதா. இவர் மறைந்த ஜெயலலிதாவின் மகளாகப் பிறந்ததாக கூறி வருகிறார். கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார் எனவும், ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் இந்த உண்மையை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் வாரிசு எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்றும் அம்ருதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் டி.என்.ஏ. சோதனை ஏன் நடத்த கூடாது’ என அரசு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினார். ‘டிஎன்ஏ சோதனைக்கு அனுமதித்தால் ஆயிரம் பேர் இப்படி வருவார்கள் . உண்மையான வாரிசு என்று ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் டி.என்.ஏ சோதனைக்கு அனுமதிக்கலாம். விளம்பரத்திற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.’ என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில், ‘இது எங்களது சொந்த விவகாரம். விளம்பரம் தேட முயற்சிக்கவில்லை’ என்று வாதிடப்பட்டது. இதற்கிடையே நீதிபதி வைத்தியநாதன், ‘ஜெயலலிதா உடலை டிஎன்ஏ சோதனை செய்ய ஏன் உத்தரவிட கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார். ‘ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது வாரிசு உரிமை கோராமல் தற்போது இறந்த பின்னர் கோருவது ஏன்? தற்போது எதன் அடிப்படையில் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிட முடியும்’ என்று மனுதாரரை நோக்கி நீதிபதி கேட்டார். அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்களில் கையெழுத்து உள்ளிட்ட பல குளறுபடி உள்ளது எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அம்ருதா தாக்கல் செய்த வழக்கில் தன்னையும் வாதியாக சேர்க்க கோரி ஜோசப் என்பவர் மனுதாக்கல் செய்தார். ‘ஜெயலலிதாவை அம்மா என கூறும் அம்ருதா, சோபன்பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன்? 6 கோடி பேர் இந்த கோரிக்கையை வைத்தால் நீதிமன்றத்தை மெரினாவில் நடத்த முடியுமா? அப்பலோ மருத்துவமனையில் ரத்த மாதிரிகள் உள்ளனவா?’ என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அரசு தலைமை வழக்கறிஞர், ‘அரசின் கருத்தை அறிந்துதான் தெரிவிக்க முடியும்’ என கூறினார். ‘அம்ருதாவுக்கு தன்னை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் .வழக்கில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்படவில்லை’ என அம்ருதா தரப்பில் வாதிடப்பட்டது.
தீபா மற்றும் தீபக்கை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க அம்ருதா கூடுதல் மனு தாக்கல் செய்தார். ‘டி.என்.ஏ சோதனை முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், மனு விசாரணைக்கு ஏற்புடையதா என பார்க்க வேண்டும். இறந்தவர்களுக்கும் தனிப்பட்ட அந்தரங்க சுதந்திரம் உள்ளது’ என அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
முடிவில் இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை ஜனவரி 5-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.