ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா கூறியதாக வெளியான தகவல்கள் தவறானவை என விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆணையத்தில் கடந்த 12–ம் தேதி சசிகலா பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். வேதா நிலையத்தில் மயங்கி விழுந்தது முதல் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மரணம் வரை ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன? என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
வி.கே.சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், தம்பிதுரை மற்றும் பிற அமைச்சர்கள் பார்த்தார்கள்’ என கூறப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது. இப்போது இதனை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மறுத்து உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்கள் தவறானது என விசாரணை ஆணையம் தெரிவித்து உள்ளது. ஜெயலலிதாவை மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், நிலோபர் கஃபில் பார்த்ததாக சசிகலா வாக்குமூலம் கொடுத்ததாக வெளியான தகவல்கள் தவறு என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விளக்கம் அளித்து உள்ளது.
‘சசிகலாவின் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளதாக நாளிதழில் வெளியான பல தகவல்கள் உண்மையல்ல. வாக்குமூலம் தொடர்பாக வெளிவந்த தகவல்கள், சசிகலாவின் ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் 20 மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்ததாக கூறப்படுவது தவறு. பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், நிலோஃபர் கபில் ஆகியோர், மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்ததாக வாக்குமூலத்தில் இல்லை’ என விசாரணை ஆணையம் சார்பில் கூறப்பட்டிருக்கிறது.