ஜெயலலிதா கைரேகை வழக்கில் இந்திய தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் அக். 13-ல் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் போஸை அங்கீகரித்து அவரது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பி படிவத்தில் ஜெயலலிதாவின் இடதுகை பெருவிரல் ரேகையை பதிவு செய்து, சென்னை அரசு பொது மருத்துவமனை பேராசிரியர் பாலாஜி சான்றளித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தேர்தல் வழக்கில் இந்த ஆவணம் மிக முக்கியமானது என்பதால், இதுதொடர்பான ஆவணங்களுடன் மாநில சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிடக்கோரி திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் இன்று (6-ம் தேதி) ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனை அடுத்து இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வருவதால் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் அக்டோபர் 13 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அதிகாரி சார்பில் ஆஜரான தொகுதி தேர்தல் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அக்டோபர் 13-ம் தேதிக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரியை விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில், டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணையும் அதே 13-ம் தேதிதான் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.