ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதால், காந்தி-பெரியார்-அண்ணா உள்ளிட்ட இதர 10 தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஜெயலலிதா படத்தை இன்று (பிப்ரவரி 12) தமிழ்நாடு சட்டமன்றத்தில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
ஜெயலலிதா படம் திறப்பு விழாவில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை. சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறாத இடதுசாரிகள், தே.மு.தி.க., பாமக உள்ளிட்ட கட்சிகளும் ஜெயலலிதா படத் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறக்கக்கூடாது. இது தொடர்பாக தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம்’ என்றார். பாமக நிறுவனர் ராமதாஸும் இது தொடர்பாக அரசை கண்டித்து கருத்து தெரிவித்து வந்தார்.
ஜெயலலிதா படம் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்று இது குறித்து அதிரடியாக ட்விட்டரில் கருத்து கூறினார் ராமதாஸ். அதில் அவர், ‘சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டு விட்டது. இனி அங்கு புனிதம் இல்லை. குறைந்தபட்சம் அங்கு ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ள காந்தி, பெரியார், அண்ணா உள்ளிட்ட 10 பேரின் படங்களை அகற்றி விடலாமே. அவர்களின் புனிதமாவது காக்கப்படும் அல்லவா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் ராமதாஸ்.
ராமதாஸின் இந்த ட்வீட்டுக்கு கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. ‘இதெல்லாம் கூட்டணி வைத்தபோது தெரியவில்லையா?’ என சிலரும், ‘புனிதம் கெட்டுவிட்ட சட்டமன்றத்திற்கு இனி எங்கள் கட்சியினர் போகமாட்டார்கள் என அறிவிப்பீர்களா?’ என்று சிலரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். வேறு சிலர், ‘1970-க்கு பிறகு வைக்கப்பட்ட அத்தனை புகைப்படங்களையும் அகற்ற வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார்கள்.