ஜெயலலிதா படத்தை அகற்ற திமுக, பாமக வழக்கு : நாளை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு

ஜெயலலிதாவின் படத்தை அகற்ற சட்டசபைச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் படத்தை அகற்ற சட்டசபைச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உருவப் படம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 12) திறந்து வைக்கப்பட்டது. இது தொடர்பாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளராக இருந்தவர், மறைந்த முதல அமைச்சர்! அவரது முழு உருவப்படம் தமிழக சட்டபேரவை கூட்ட அரங்கில் திறக்கப்பட்டுள்ளது. இதை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சபாநாயகரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தேன்.

ஜெயலலிதா, ஊழல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனை பெற்றவர். அவருக்கு விசாரணை நீதிமன்றம் 100 கோடி அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவரின் படத்தை சட்டசபையில் திறந்து வைப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும்.

ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர். அவரது படத்தை அரசு அலுவலகங்களிலும், அரசு திட்டங்களில் வைக்க தடை விதிக்க கோரி கடந்த ஆண்டு நான் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருந்து வருகின்றது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் முழு உருவ படத்தை சட்டசபையில், சபாநாயகரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா உருவப் படத்தை திறக்க, எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்துக்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, இன்று அவரது படத்தை திறந்து வைத்துள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பானது. இந்த செயல் எதிர்கால சந்ததியினர் மத்தியில் தவறான கருத்தை கொண்டு செல்லும்.

ஜெயலலிதாவால் இருமுறை சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் சபாநாயகர் தனபால். அதனால், அவருக்கு விசுவாசத்தை காட்டும் விதமாக, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்துள்ளார் . தமிழக சட்ட மன்றத்தில் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை உடனடியாக அகற்ற, சட்டசபை செயலாளர், உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்பு இன்று காலையில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ‘தமிழக சட்டமன்றத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். அப்போது, பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு, வழக்கறிஞர் எஸ். துரைசாமி சார்பிலும் படத்தை திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்தனர்.

அதற்கு நீதிபதிகள், ‘மனுவாக தாக்கல் செய்யுங்கள். நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்’ என கூறினார். திமுக, பாமக, வழக்கறிஞர் துரைசாமி என 3 தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close