ஜெயலலிதா சிலை தத்ரூபமாக இல்லையே? அதிமுக.வினர் முணுமுணுப்பு

ஜெயலலிதா சிலை தத்ரூபமாக இல்லையே? என அதிமுக.வினர் மத்தியிலேயே முணுமுணுப்பு எழுந்திருக்கிறது. எப்படி இதில் அஜாக்கிரதையாக இருந்தார்கள்?

ஜெயலலிதா சிலை தத்ரூபமாக இல்லையே? என அதிமுக.வினர் மத்தியிலேயே முணுமுணுப்பு எழுந்திருக்கிறது. எப்படி இதில் அஜாக்கிரதையாக இருந்தார்கள்?

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை இன்று (பிப்ரவரி 24) அதிமுக.வினர் கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஜெயலலிதா சிலை திறந்து வைக்கப்பட்டது.

ஜெயலலிதா சிலையை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி க.பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழாவை இன்று இந்தியாவே உற்று நோக்கியபடி இருந்தது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று இந்த விழா நடைபெறுவதும், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை திறக்கப்படுவதும் முக்கியத்துவத்திற்கான காரணம்! எனவே ஜெயலலிதா சிலை சிறப்பான வகையில் இருக்க வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலையை உருவாக்கும் பொறுப்பை ஹைதராபாத்தில் உள்ள சிற்பி ஒருவரிடம் ஒப்படைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை பணிகள் முடிந்து, அதிமுக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஒரு துணி மூலமாக சிலையை மூடி வைத்திருந்தனர்.

ஜெயலலிதா சிலையை இன்று பகல் 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்ததும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் பலருக்கே அதிர்ச்சி! காரணம், சிலையின் முக அமைப்பில் ஜெயலலிதாவின் சாயல் போதுமான அளவில் இல்லை.

ஜெயலலிதா முகத்தில் இரட்டை நாடி அமைப்பு கிடையாது. ஆனால் இந்த சிலை அமைப்பில் இரட்டை நாடி இருப்பதாக சிலர் குறிப்பிட்டு கூறினர். அந்த அமைப்பு, சசிகலாவை போல தோற்றமளிப்பதாகவும் சிலர் விமர்சித்தனர்.

முக்கிய நாளில், முக்கிய இடத்தில் அமையவிருக்கும் தங்களின் தலைவியின் சிலை அமைப்பிலேயே ஆளும்கட்சியினர் காட்டிய அக்கறை இவ்வளவுதானா? என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் ஜெயலலிதாவின் சிலை அமைப்பு கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.

 

×Close
×Close