ஜெயலலிதா கைரேகை வழக்கு : சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து

ஜெயலலிதா கைரேகையை பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறை பதிவேட்டில் இருந்து தாக்கல் செய்யக் கூறிய சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

ஜெயலலிதா கைரேகையை பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறை பதிவேட்டில் இருந்து தாக்கல் செய்யக் கூறிய சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகும், அவரது கை ரேகை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

‘ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என அதில் சரவணன் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது பெங்களூர் சிறை பதிவேடுகளில் இருக்கும் ஜெயலலிதா கைரேகையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு வெளியான அன்றே ஏ.கே.போஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா கைரேகையை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

மேலும், பெங்களூர் சிறையிலிருந்து பெறப்பட்ட கைரேகையை திரும்ப அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அடுத்த கட்ட விசாரணைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close