ஜெயலலிதா வீடியோவை கிருஷ்ணபிரியா எனக்கு தரவில்லை. அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை என டிடிவி தினகரன் கூறினார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்த சூழலில், இன்று (டிசம்பர் 21-ம் தேதி) மாலையில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் எனக்காக பணியாற்றிய அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஜெயலலிதா வீடியோ குறித்து விரிவாக பேசமுடியாது. வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டது எனக்கோ, சசிகலாவுக்கோ தெரியாது. தொலைக்காட்சி பார்த்தே இதனை தெரிந்துகொண்டேன்.
வெற்றிவேலிடம் இது குறித்து கேட்டபோது, ஜெயலலிதாவை கொன்று விட்டார்கள் என்று துண்டு பிரச்சாரம் செய்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் வீடியோவை வெளியிட்டதாக கூறினார். தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று வீடியோவை வெளியிட்டிருக்கலாமே என வெற்றிவேலிடம் கூறினேன். வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டதால் நான் வருத்தமடைந்தேன். அவர் தன்னுடைய சுயநலத்திற்காக வீடியோவை வெளியிடவில்லை.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அந்த வீடியோ கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டது. ஜெயலலிதா கேட்டுக்கொண்டதன் பேரில் சசிகலாதான் தனது போனில் எடுத்தார். தான் வேட்பாளராக இருந்த காரணத்தால் வீடியோ குறித்து எதுவும் பேசமுடியவில்லை. எங்களிடம் வீடியோ இருப்பது அனைத்து அமைச்சர்களுக்கும் தெரியும்.
வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ண பிரியா உள்ளிட்ட குடும்பத்தினர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது அம்மாவும், சின்னம்மாவும் அன்பு வைத்திருக்கிறார்கள். சின்னம்மாவுக்காக தனது பதவி போனாலும் பரவாயில்லை என தியாகம் செய்துவிட்டு அவர் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் களத்தில் நின்று போராடுகிறார்கள். சின்னம்மா மீதான பழியை துடைக்கவே இதை செய்ததாக அவர் கூறுகிறார்.
கிருஷ்ணபிரியா எங்கள் உறவினர் என்றாலும், அடிக்கடி அவருடன் பேசும் வழக்கம் இல்லை. அவர் என்னிடம் அந்த வீடியோவை தந்ததாகவும், அதுவும் விசாரணை கமிஷனில் கொடுக்க தந்ததாகவும் கூறியிருக்கிறார். அவர் ஏன் அப்படி சொன்னார் எனத் தெரியவில்லை. இந்த வீடியோவை அவர் என்னிடம் தரவில்லை.
தவிர, விசாரணை ஆணையம் அமைக்கும் முன்பே கடந்த பிப்ரவரியிலேயே சின்னம்மாவிடம் கேட்டு நான் வீடியோவை வாங்கினேன். வெற்றிவேல் கேட்டதால் அவரிடமும் அப்போதே கொடுத்தேன். ஆனால் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கவில்லை.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் கேட்டால் வீடியோ ஆதாரங்களை கொடுப்போம் என்று முன்னதாகவே கூறியிருந்தோம். இனி கேட்டால் கொடுப்போம். ஜெயலலிதா நைட்டியில் இருப்பதாலே இந்த விடியோவை வெளியிட வேண்டாம் என்று சசிகலா கூறியிருந்தார்.
ஒரு தமிழராக கனிமொழி, ராசா விடுதலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தேன். அதை வேறு எதனுடனும் முடிச்சு போடுவது சரியல்ல. அடுத்தவர் வீழ்வதை எதிர்பார்த்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. வீடியோ ஆதாரம் கேட்டுவிட்டு தற்போது வெளியானதும் கீழ்த்தர அரசியல் என்று மு.க ஸ்டாலின் கூறியது ஏற்புடையதல்ல. அதிமுக.வின் முதன்மை எதிரி திமுக தான். இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயலலிதா வீடியோ தொடர்பான சர்ச்சைகளுக்கு வாக்குப் பதிவு முடிந்த பிறகே பதில் கூற நினைத்து, இந்த பேட்டியை அவர் அளித்தது குறிப்பிடத்தக்கது.