ஜெயலலிதாவின் 53 கோடி ரூபாய் சொத்துகள் : ஜெ.தீபா, தீபக் புதிய வழக்கு

ஜெயலலிதாவின் 53 கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்க உரிமை கோரி அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

ஜெயலலிதாவின் 53 கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்க உரிமை கோரி அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது சொத்துகளை நிர்வகிப்பது யார்? என்பதிலும் சர்ச்சை நிலவுகிறது. போயஸ் கார்டன் இல்லத்தை அரசு இல்லமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவரும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்தச் சூழலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவர் வாழ்ந்த போயஸ் தோட்டத்து வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்தோட்டத்து இல்லம், தங்கம், வைர நகைகள் என மொத்தம், 53 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் நிர்வாகிகளாக தங்களை நியமிக்க வேண்டும் என, அவரது சகோதரர் ஜெயராமனின் மகன் தீபக்கும், மகள் தீபாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அவரது சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கும்படி, சம்பந்தப்பட்ட தாசில்தாரரிடம் விண்ணப்பித்ததாகவும், ஆனால் இதுசம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்றுக் கொள்ளும்படி அவர் பதிலளித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் வேறு எவரும் இல்லை எனவும், அவர் தன் சொத்துக்கள் தொடர்பாக எந்த உயிலும் எழுதி வைக்காத காரணத்தால், இந்து வாரிசு சட்டப்படி தங்களை அந்த சொத்துக்களுக்கு நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியுள்ளனர்.

இந்த மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

×Close
×Close