scorecardresearch

ஜிக்னேஷ் மேவானி, சென்னையில் கிளப்பிய புயல் : பிரபலங்கள் சொல்வது என்ன?

ஜிக்னேஷ் மேவானி..! காங்கிரஸே திணறுகிற குஜராத் தேர்தல் களத்தில் சுயேட்சையாக சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கி வாகை சூடியவர்! நாடறிந்த தலித் செயல்பாட்டாளர்!

ஜிக்னேஷ் மேவானி, சென்னையில் கிளப்பிய புயல் : பிரபலங்கள் சொல்வது என்ன?
Jignesh Mevani, Chennai Press Boycott, Republic TV

ஜிக்னேஷ் மேவானி..! பாரம்பரிய காங்கிரஸே திணறுகிற குஜராத் தேர்தல் களத்தில் சுயேட்சையாக சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கி வாகை சூடியவர்! நாடறிந்த தலித் செயல்பாட்டாளர்!

ஜிக்னேஷ் மேவானியின் செயல்பாடுகளுக்கு தமிழகத்திலும் தலித் செயல்பாட்டாளர்கள், பெரியாரிஸ்ட்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்தச் சூழலில் பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்திற்கு விசிட் அடித்த ஜிக்னேஷ் மேவானி ஒரு சர்ச்சைப் புயலையும் கிளப்பியிருக்கிறார். ஜனவரி 16-ம் தேதி சென்னையில் அவரது பிரஸ் மீட்டில் குறிப்பிட்ட வட இந்திய ஆங்கில சேனல் ஒன்றை அவர் புறக்கணிக்க விரும்பியதும், அந்த சேனல் மைக்கை மட்டும் பிரஸ் மீட்டில் இருந்து அகற்றக் கூறியதும்தான் சர்ச்சைக்கு காரணம்!

ஜிக்னேஷ் மேவானியின் இந்த அணுகுமுறைக்கு இதர ஊடகவியலாளர்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதான் தமிழகத்தில் தற்போது ஊடகவியலாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மத்தியில் சூடான விவாதமாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக செயல்பாட்டாளர்கள் சிலரது கருத்துகளை இங்கே பார்க்கலாம்!

சுப.உதயகுமாரன்: (அணு உலை எதிர்ப்புப் போராளி, பச்சைத் தமிழகம் ஒருங்கிணைப்பாளர்)

சென்னை ஊடகத் தோழர்களே, உங்கள் அனைவரோடும் பல ஆண்டு காலமாக நான் நெருங்கிப் பழகிவருகிறேன். எங்கள் போராட்டத்துக்கும், எனக்கும் பல வழிகளில் நீங்கள் பேருதவி புரிந்து வருகிறீர்கள். உங்கள் உதவி இல்லாமல் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகப் போராடியிருக்க, இன்னும் போராடிக்கொண்டிருக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. அதேபோல உங்கள் அன்பும், கனிவான பார்வையும் இல்லாமலிருந்தால் நான் என்றோ கொல்லப்பட்டிருப்பேன். எனவேதான் ஒவ்வொரு ஊடக சந்திப்பு முடிந்ததும் உங்கள் எல்லோருக்கும் தவறாது நன்றி தெரிவிக்கிறேன் நான்.

ரிபப்ளிக் டிவி சார்பாக என் மீது நடத்திய “ஸ்டிங் ஆபரேஷன்” பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். மூன்று நாட்கள் என்னைப் பற்றி என்னென்ன அவதூறுகள் சொல்ல முடியுமோ அனைத்தையும் மூச்சுவிடாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவன் ஒரு சர்ச் கையாள், வெளிநாட்டுக் கைக்கூலி, பணவெறியன், பிரிவினைவாதி, தேசத்துரோகி என்றெல்லாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாய்க்கு வந்தபடி பேசித் தீர்த்தார்கள்.

இந்தியாவே எனக்கு எதிராகத் திரண்டு எழும், நான் கைது செய்யப்படுவேன், கேவலத்துக்குள்ளாகி அன்னியப்படுத்தப்படுவேன், என் தோழர்கள் என்னை விட்டு விலகுவார்கள் என்றெல்லாம் இந்தக் கூட்டம் ஆசையோடு எதிர்பார்த்திருந்த நிலையில், சென்னை ஊடகத் தோழர்களாகிய நீங்களும், தமிழக ஊடகத் தோழர்களும் முற்றிலுமாக ரிபப்ளிக் டிவி செய்தியைப் புறக்கணித்தீர்கள்.

என் வீட்டு அடுப்பங்கரை வரை வந்து புழங்கி, பழகி, எனது நேர்மையை, உண்மைத்தன்மையை உணர்ந்த ஊடகத் தோழர்களாகிய நீங்கள் என்னைக் காப்பாற்றிவிட்டீர்கள் என்று நான் பூரித்துப் போனேன். ரிபப்ளிக் டிவிக்கு எதிராக பலர் தனிப்பட்ட முறையில் கருத்துத் தெரிவித்தாலும், எந்த ஊடக நிறுவனமும், செய்தியாளர் சங்கமும் ரிபப்ளிக் டிவியின் அடாவடித்தனத்தை கண்டிக்கவேயில்லை. இப்போது ஜிக்னேஷ் மேவானியை கண்டித்து வெளிநடப்பு செய்யும் தோழர்கள், அப்போது ரிபப்ளிக் டிவியைக் கண்டித்துப் புறக்கணித்திருக்க வேண்டாமா?

ரிபப்ளிக் டிவியை நான் ஏற்க வேண்டும் என்று யாராவது கேட்டுக்கொண்டால், நிச்சயம் நான் அதைச் செய்யமாட்டேன். தனி மனிதர்களை மன்னிக்கலாம், அவர்கள் செய்த தவறுகளை, கொடுமைகளை மறக்கலாம். ஆனால், பாசிச அமைப்பு ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் நிச்சயமாக என்னால் முடியாது. பெரும்பாலான மனிதர்களால் அது முடியாது.

தோழர் ஜிக்னேஷ் மேவானி ரிபப்ளிக் டி.வி.காரர்களுடன் பேசமாட்டேன் என்று சொன்னது இந்த அடிப்படையில்தான் அமைந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அனைவரும் அவரைப் புறக்கணித்ததாக அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்”
என்பது நம் குறள் வழங்கும் தீர்ப்பு. ஜிக்னேஷ் மேவானியையும், அர்னாப் கோஸ்வாமியையும் அருகருகே நிறுத்தி அளந்து பாருங்கள். உங்களுக்கேத் தெரியும். இவ்வாறு சுப.உதயகுமாரன் கூறியிருக்கிறார்.

த.நீதிராஜன் (செயல்பாட்டாளர்) : ஜிக்னேஷ் மேவானியின் கலந்துரையாடலை காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் ஒருங்கிணைத்தவர்களில் நானும் ஒருவன்.
கலந்துரையாடலில் ஊடக நண்பர்களும் கலந்துகொண்டனர். அது முடிந்ததும் ஊடக நண்பர்கள் தனியே அவரை அழைத்தனர். மேவானியும் தனியறைக்கு சென்று அமர்ந்து பேட்டிக்கு தயாரானார்.

அப்போது அங்கே ரிபப்ளிக் டிவியும் இருப்பதைப் பார்த்தார். ரிபப்ளிக் டிவியிடம் பேசமுடியாது என்று சொல்லிவிட்டு தனியறையிலிருந்து வெளியேறி கலந்துரையாடல் நடந்த அறைக்குத் திரும்பிவிட்டார். அவரது இந்த அணுகுமுறைக்கு டைம்ஸ் நவ் நண்பர் எதிர்ப்பு தெரிவித்தார். “திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக தலைவர் ஜெயலலிதா கூட இவ்வாறு நடந்துகொண்டதில்லை. சட்டப்பேரவை உறுப்பினர் ஆக ஆனதற்கே இப்படியா” என்றவகையில் அவரது எதிர்ப்பு இருந்தது.

கவிஞர் சல்மாவும் பிரேமா ரேவதியும் அவரை சமாதானம் செய்தனர். “மேவானி பேச பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதானே” என்ற பாணியில் அவர்கள் பேசினர். ஒருவருக்கொருவர் மிகவும் அறிமுகமானவர்கள் என்பதால் உணர்ச்சிபூர்வமான, நெருக்கமான, அதே நேரத்தில் தீவிரமான வாத, எதிர்வாதமாக அது இருந்தது.

அதன்பிறகு மதிய உணவுக்கு இன்னொரு அறைக்கு அவரை அழைத்துச்சென்றோம். அகாடமியின் வாசலில் ரிபப்ளிக் டிவி மட்டும் நேரலை ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.
கீழே சென்று காரில் ஏறும்போது அவரை மறித்து கேள்வி எழுப்ப ரிபப்ளிக் டிவி முயன்றது. அதைத் தடுத்து அவரை காரில் அனுப்பிவைத்தேன்.

இதுபோல குறிப்பிட்ட டிவியை புறக்கணிப்பது சரியா என்று அந்த டிவியின் நிருபர் எங்களைக் கேட்டார். இதே விவாதம் இணையத்திலும் நடக்கிறது. தொடர்ந்த செல்போன் அழைப்புகள். இடைவிடாத கூட்டங்கள், அதன் விளைவான கடும் தலைவலி என்ற நிலையில் மேவானி இருந்தார். தான் பேசுவதை விட தமிழகத்திலிருந்து கற்றுக்கொள்ள வந்திருப்பதாக கலந்துரையாடலின் ஆரம்பத்திலும் இடையிலும் அவர் அடிக்கடி சொன்னார். ஆனாலும் ஏராளமான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும்வகையிலே கலந்துரையாடல் இருந்தது.

மீடியாக்கள் அதையும் பதிவு செய்தன. சில மீடியாக்கள் கேள்விகளும் எழுப்பின. தி இந்து உள்ளிட்ட செய்தியாளர்களுக்கு தனிப்பட்ட பேட்டிகளும் அவர் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆங்கிலத்தில் வெளியான சில ஆன்லைன் செய்திகள் மீடியாக்கள் அவரை புறக்கணித்தன என்றன. அது உண்மையல்ல.

தலைவர்களின் மீடியா அணுகுமுறை வேறுபட்டவை.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் அணுகுமுறை அதில் ஒன்று. அவர் பொதுக்கூட்டங்களில் மீடியாக்கள் தங்களின் பணியை ஓரளவு முடித்தபிறகு சொல்வார் “மீடியா நண்பர்கள் எங்களைப் பற்றி நல்லவிதமான செய்திகளை அனுப்பினாலும் உங்களின் உரிமையாளர்கள் அதனைப் போட மாட்டார்கள். எனவே, உங்களின் பணி முடிந்ததும் தயவு செய்து விலகி நில்லுங்கள். நான் மக்களிடம் நேரடியாக பேசிக்கொள்கிறேன்” என்று வேண்டுவார்.

திமுக தலைவர் கருணாநிதியின் அணுகுமுறையும் தனித்துவமானது. தனது குடும்பத்தினர் பற்றிய கடுமையான கேள்விகளை எதிர்கொள்ளும்போது அவர் நிதானம் தவறுவார்தான். ஆனால் அவர் பொதுவாக, எதிரி மீடியாவையைக் கூட பக்குவமாக கையாண்டுவிடுவார்.
நிருபர் கேள்வி கேட்டதுபோலவும் அதற்கு அவர் பதில் அளித்தது போலவும் கேள்வி- பதில் பாணியிலான அறிக்கையை அவர் பத்திரிகைகளுக்கு ஒவ்வொரு நாள் மாலையிலும் அனுப்புவார். அது அவரது தந்திரத்தின் உச்சம்.

கேரளத்தின் தேசாபிமானி இதழுக்காக நானும் அதன் நிருபரும் ஒரு முறை அணுகிய போது முன்கூட்டியே கேள்விகளை கொடுத்துவிட வேண்டும் என்று நிபந்தனை போடப்பட்டது. அதன்படியே நேர்காணல் எடுக்க முடிந்தது.
ஜோதிபாசு, கருணாநிதி போல, மேவானியும் மீடியாக்கள் உடனான தனது அணுகுமுறையை மேம்படுத்த வேண்டியுள்ளது.

இன்னொரு பக்கத்தில் மீடியாக்களில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மெயின் ஸ்ட்ரீம் மீடியா என்று அழைக்கமாட்டோம். வணிக மீடியா என்றுதான் அழைப்போம் என்று மீடியாக்கள் மீதான விமர்சனம் புதிய சொற்களை பிரசவித்து வருகிறது.

ஊடக தர்மத்தை கடைப்பிடிக்காத மீடியாக்களை என்ன செய்வது? மிகவும் வெளிப்படையாக அதிகார மையங்களை ஆதரிப்போரை என்ன செய்வது? மக்களில் மத்தியில் சேவைப் பணியாற்றுவோரை வேட்டையாடும் சில மீடியாக்களை எதிர்க்கிற உரிமை செயல்பாட்டாளர்களுக்கு இல்லையா?

மீடியாக்கள் ஊதிப் பெருக்க வைத்த ஆளுமைகள் எப்போதும் மீடியாக்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கிக்கிடக்கலாம். மக்களிடமிருந்து எழுகிற மேவானி போன்ற தலைவர்கள் தங்களின் விருப்பு வெறுப்பை மீடியாக்களிடம் காண்பிப்பதேகூட ஒரு அறச் சீற்றம்தான்.

கொங்கணவா முனிவர் காக்காவை முறைத்தார். அது எரிந்து சாம்பலானது. ஒரு இல்லத்தரசியை முறைத்தார். அவர் “கொக்கு என்று நினைத்தாயா கொங்கணவா” என்று திருப்பி முறைத்தார். அது போல சில வகை மீடியாக்களை சிலர் திருப்பி முறைக்கத்தான் செய்வார்கள். அதுவும் ஜனநாயகத்தின் உயிரோட்டம்தான். எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

குமரேசன் (மூத்த பத்திரிகையாளர்) : ‘ரிபப்ளிக் டிவி சித்தரிப்பு நோக்கங்கள் குறித்த கடும் விமர்சனங்கள் எனக்கு உண்டு. ஆனால் ஒரு ஊடக நிறுவனம் என்ற முறையில், பொது நிகழ்வுகளுக்கு வருவது, கேள்வி கேட்பது ஆகிய உரிமைகள் யாராலும் மறுக்க முடியாதவை.

அர்னாப் கோஸ்வாமியின் அரசியல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. ஆனால் அந்நிறுவனத்தின் சார்பில் கேமராவும் மைக்குமாக வருகிற செய்தியாளரெல்லாம் அர்னாப் அல்ல. சென்னையில் காயிதே மில்லத் ஊடகக் கல்வி நிறுவன அரங்கில் இன்று (ஜனவரி 16) காலை நடைபெற்ற அருமையான கலந்துரையாடலைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேசை மீது வைக்கப்பட்ட பல தொலைக்காட்சிகளின் மைக்குகளில் ஒன்றாக, ரிபப்ளிக் டிவி மைக்கும் இருந்ததைப் பார்த்த ஜிக்னேஷ், அந்த நிறுவனத்திற்கு பேட்டியளிக்க விரும்பவில்லை எனக்கூறி அதை அப்புறப்படுத்தக் கூறியது பக்குவமான நிலையல்ல. இதில் சென்னைப் பத்திரிகையாளர்கள் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி வெளியேறியது, தவிர்க்கவியலாதது, பாராட்டத்தக்கது.

ஒன்றிணைந்து செயல்படுவது பற்றியும். கருத்து முரண்பாடு உள்ளவர்களோடும் இணைநது செயல்படுவது பற்றியும் சிறப்பான கருத்துகளைக் கலந்துரையாடலில் வெளிப்படுத்திய ஜிக்னேஷ், ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகத் தொழிலாளர்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்.’

 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Jignesh mevani chennai press boycott republic tv

Best of Express