காங்கிரஸ் தலைவரும் குஜராத் மாநில வட்காம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி, தனது கட்சி குஜராத்தில் முன்னோக்கி செல்லும் வழி கடினமானது என்பதை ஒப்புக்கொள்கிறார். “எம்.எல்.ஏ.க்கள் ஒரு பெரிய கவலையை விட்டுவிட்டால், ஒருவர் மட்டும் என்ன செய்ய முடியும்?” என்று மேவானி கேட்கிறார்.
குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்காம் தொகுதி வரவிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கபப்டும் தொகுதிகளில் ஒன்று. ஏனெனில், அந்த தொகுதியைத் தக்கவைக்கப் போராடுவது கடந்த முறை சுயேட்சையாக வென்ற ஜிக்னேஷ் மேவானி. இம்முறை ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ளார்.
ஒரு விரிவான நேர்காணலில், அவர் தனது தேர்தல் வெற்றி வாய்ப்பு மற்றும் அவரது காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டையும் பற்றி விவாதிக்கிறார். 2017-ம் ஆண்டு தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டதில் இருந்து இந்த தேர்தல் எப்படி வித்தியாசமாக இருக்கிறது, பா.ஜ.க, தேர்தல் கருத்துக் கணிப்புகள் பற்றி அவர் கூறினார்.
2017-ல் சுயேட்சையாகப் போட்டியிட்டீர்கள். இந்த ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறீர்கள், என்ன வேறுபாடு உள்ளது?
குஜராத் மற்றும் இந்தியா முழுவதும் கல்வியறிவு பிரச்சினை உள்ளது. படிப்பறிவற்ற கிராமப்புற மக்களுக்கு (சுயேச்சை வேட்பாளரின்) சின்னத்தை கண்டுபிடிப்பது கடினமானது என்பது அனைவரும் அறிவார்கள். கடந்த தேர்தலில் 2000 முதல் 5,000 பேர் தையல் இயந்திரம் சின்னத்தை (2017-ல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட மேவானியின் சின்னம்) கண்டுபிடிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டார்கள். எனவே, இந்த சூழலில், நான் காங்கிரஸ் வேட்பாளராக பலனடைவேன்.
அதுமட்டுமல்லாமல், 2017-இல் சுயேட்சை வேட்பாளர் பிரச்சினையால் காங்கிரஸில் பெரும்பாலானோர் திகைத்தனர். எனவே, அந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டது. இதற்கு கட்சித் தொண்டர்கள் எல்லோரும் என்னுடன் இருப்பார்கள் என்று அர்த்தமல்ல. மொத்தத்தில், நான் இப்போது காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமாக இருப்பதை காங்கிரஸ் தொண்டர்கள் நன்றாக உணர்கிறார்கள். எனவே, அது உதவியாக இருக்கிறது. மேலும், காங்கிரஸ் பழமையான கட்சி. எனவே, நான் காங்கிரஸ் சின்னத்தின் அதிகமான நன்மையை பெறுகிறேன்.
இரண்டாவதாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து முறையான ஆதரவைப் பெறுகிறேன். அது கடந்த முறையும் இருந்தது. பல கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் வாய்ப்புகளை இப்போது என் மூலம் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் காங்கிரஸ் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது எனக்கு சாதகமாக உள்ளது.
உச்ச நீதிமன்றம் சமீபத்தில் 10 சதவீத முற்பட்ட வகுப்பினருக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை (EWS) உறுதி செய்தது. இது குஜராத் தேர்தலை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் என்று பார்க்கிறீர்களா?
இந்த நேரத்தில் பெரிய தாக்கம் இருபதாகப் பார்க்க வில்லை. அது உருவாக்கிய எந்த நேர்மறை அல்லது எதிர்மறை அதிர்வுகளும் என்னை அடையவில்லை. ஒருவேளை நான் பிரச்சாரத்தில் மூழ்கி இருக்கலாம். மற்றபடி, பொதுவாக, இந்த மாதிரியான தீர்ப்பு வரும்போது, இரு தரப்பு முகாம்களில் இருந்தும் எதிர்வினைகள் இருக்கின்றன. ஒரு தரப்பு முகாம் அதை மதிக்கிறது, மற்றொரு தரப்பு முகாம் அதை நிராகரிக்கிறது. ஆனால், அதைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை.
2017 தேர்தலில், உனாவில் சாட்டையால் அடிக்கப்பட்ட சம்பவம் முக்கிய காரணிகளில் ஒன்று. இந்த முறை இந்த சுழாலில் அதன் தாக்கம் எங்கும் இல்லை. கடந்த ஐந்தாண்டுகளில் தலித் பிரச்னைகளில் அரசின் அணுகுமுறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தலித்துகள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்க மக்கள். அவர்கள் இந்தியாவின் கிராமப்புறத்தில் வசிக்கும் நிலமற்ற மக்கள். குஜராத் மாநிலத்திற்கும் இது பொருந்தும். எனவே, பா.ஜ.க எந்த வகையான பொருளாதாரக் கொள்கைகளுக்காக நிற்கிறது. அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட பொருளாதாரப் பேரழிவு – பணவீக்கம், வேலையின்மை, பொருளாதாரச் சுரண்டல் – இவை அனைத்தும் தலித்துகளைப் பாதிக்கின்றன. பெரிய அளவில் பிரச்சாரம் செய்யாவிட்டாலும், அது தலித்துகளை பாதிக்கும் என்பதால், அவர்கள் பா.ஜ.க-வில் இருந்து விலகி இருப்பார்கள்.
இரண்டாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் பா.ஜ.க-வுக்கு எதிராக நான் எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தேனோ அங்கெல்லாம் நாங்கள் நிறைய சித்தாந்தப் பணிகளைச் செய்துள்ளோம். பா.ஜ.க எதைக் குறிக்கிறது என்பதை நாங்கள் விளக்கியுள்ளோம். நாம் ஏன் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அடுத்ததாக, இடஒதுக்கீட்டுக் கொள்கையால் பயனடைந்த தலித் நடுத்தர வர்க்கத்தினர். அவர்கள் இட ஒதுக்கீட்டை முடிப்பதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது என்றும், பா.ஜ.க-வும் அதன் முன்னணி அமைப்புகளும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை தலித் மக்களுக்கு விளக்கும் அளவுக்கு குரல் கொடுத்துள்ளனர்.
தலித்துகள் மீதான குஜராத் அரசின் அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் நீங்கள் பார்க்கவில்லையா?
தலித்துகள் மீதான அரசின் அணுகுமுறை பரிதாபத்திற்குரியது. அவர்களைப் பற்றி அரசுக்கு கவலையே இல்லை. ‘நீங்கள் சாவுங்கள் எங்களுக்கு கவலையில்லை.’ அதுதான் அரசின் அணுகுமுறை. எல்லா மூலைகளிலிருந்தும் கோரிக்கைகள் வந்தாலும், மாநில சட்டமன்றத்தில் பிரச்சினைகள் எழுப்பப்பட்டாலும், அவர்கள் வன்கொடுமை வழக்குகள் (எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்) பற்றி கவலைப்படுவதில்லை அல்லது உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. அவர்கள் எஸ்சி, எஸ்டி துணைத் திட்டச் சட்டத்தை உருவாக்குவது பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் நிலமற்ற தலித்துகள் பற்றி எதுவும் செய்ய விரும்பவில்லை. அவர்கள் நிலம் ஒதுக்க விரும்பவில்லை. அவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்காத வரையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்த விரும்பவில்லை. எனவே, அணுகுமுறை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
2017-ல் ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர் மற்றும் நீங்கள் பா.ஜ.க-வுக்கு எதிராகப் போராடினீர்கள். 2022-ல் ஹர்திக் படேல் மற்றும் அல்பேஷ் தாக்கூர் பா.ஜ.க-வில் இருக்கிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?
குஜராத் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.
நீங்கள் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லையா?
நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன்.
ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போவதாக கூறி வருகிறது. குஜராத்தில் அதை ஒரு அரசியல் சக்தியாக எப்படி பார்க்கிறீர்கள்?
முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ அனைவருக்கும் உரிமை உள்ளது.
வட்காம் தொகுதி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதி, இங்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்த தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம்-க்கு ஏதாவது செல்வாக்கு இருக்கிறதா?
அவர்களுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. ஆனால், இந்தியா முழுவதிலும் முஸ்லிம் சமூகத்தின் அறிவால் இறுதியில் அது சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.
இந்த முறை (ஏ.ஐ.எம்.ஐ.எம் மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர்களால்) உங்கள் வாக்குகள் குறைவதாகப் பார்க்கிறீர்களா?
இல்லை. நான் அப்படி பார்க்கவில்லை. மாறாக, விபுல் சௌத்ரி விவகாரம் ஒரு காரணம். (சௌத்ரி சமூகத் தலைவரின் சிறைவாசம் சௌத்ரி சமூகத்தை பா.ஜ.க-வுக்கு எதிராகத் திருப்பியுள்ள), உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் சிலரின் பிடிப்பு இல்லாத காரணமாக (வெற்றி) வித்தியாசம் அதிகரிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன. பா.ஜ.க-வில் இருந்து சௌத்ரி சமூகத்தின் மிகவும் உறுதியான பா.ஜ.க தொண்டர்களிடம் இந்தப் பிரச்சினைகளால், நிறைய அமைதியின்மை நிலவுகிறது. தண்ணீர்ப் பிரச்சினையில் நான் பணியாற்றுவதால், சௌத்ரி சமூகத்தின் ஒரு பிரிவினர் என்னை விரும்புகிறார்கள்.
நீங்கள் இந்த முறை சௌத்ரி சமூகம் உங்களுக்கு ஆதரவளிப்பதாகப் பார்க்கிறீர்களா?
இந்த முறை அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அதை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். விபுல் சவுத்ரி சிறையில் அடைக்கப்பட்டதால் எனக்காக பிரச்சாரம் செய்கிறார்கள்.
டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராஜேந்திர பால் கௌதமின் புத்த மத மாற்றத் திட்டம் தொடர்பான நிகழ்வுகள் பா.ஜ.க-வால் பெரிய தேர்தல் பிரச்சினையாக மாற்றப்பட்டது. அதன்பிறகு, டெல்லி அமைச்சர் பதவியையும் கெளதம் ராஜினாமா செய்தார். நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்?
தலித்துகள் மத்தியில் அது சரியாகப் போய்சேரவில்லை. தலித்துகள் போதுமான கல்வியறிவு, அரசியல் சார்பு கொண்டவர்கள். உயர்சாதி ஓட்டுகள் என்று அழைக்கப்படுவதைப் பாதுகாக்க, ஆம் ஆத்மி கட்சி அதைச் செய்தது. (கௌதமை ராஜினாமா செய்ய வைத்தது).
குஜராத் காங்கிரஸின் செயல் தலைவரான பிறகு, கட்சிக்கு உங்கள் பங்களிப்பு என்ன?
எனது கட்சிக்கு எனது சேவை தேவைப்படும்போது – மக்களுக்குச் சென்று உரையாற்றுவது, சில பிரச்சினைகளை எடுத்துக்கொள்வது, வடக்கு குஜராத்தில் கவனம் செலுத்துவது, குறிப்பாக நான் பொறுப்பாளராக இருக்கும் பதான் மற்றும் பானஸ்கந்தா மாவட்டங்களில் – நான் அதைச் செய்கிறேன். எனவே, வேலை செய்யும் தலைவர் என்ற முறையில் எனக்கு எந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதோ, அதைச் செய்து வருகிறேன்.
2017ல் காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், தற்போது 59 எம்.எல்.ஏ.க்களாக குறைந்துள்ளனர். பலர் ராஜினாமா செய்துள்ளனர். இந்தப் பின்னணியில், காங்கிரஸின் முன்னோக்கி செல்லும் வழியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அது சந்தேகமே இல்லாமல் கடினமானதுதன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு வெளியேறும் விதம் குஜராத்தில் உள்ள அனைவருக்கும், மத்திய தலைமைக்கும்கூட பெரும் கவலையாக உள்ளது. இது ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை. ஆனால், ஒருவர் மட்டும் என்ன செய்ய முடியும்? இது கட்சிக்கு பெரும் கவலையாக உள்ளது. உடனடி தீர்வு இல்லை. ஆனால், நல்ல விஷயம் என்னவென்றால், பா.ஜ.க எவ்வளவு முயற்சி செய்தாலும், நாங்கள் இன்னும் 60 எம்எல்ஏக்களாக இருக்கிறோம். கடந்த 27 ஆண்டுகளில் நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை. ஆனால், காங்கிரஸுக்கு இன்னும் குஜராத் முழுவதும் மிகப்பெரிய அடித்தளம் உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் கிட்டத்தட்ட எல்லா வாக்குச் சாவடிகளிலும் அடிமட்ட தொண்டர்கள் உள்ளனர். காங்கிரஸின் சக்தி மிகவும் சரியானது. ஆனால், இது சவாலாக இருக்கிறது. நிறைய சித்தாந்தப் பணிகளைச் செய்ய வேண்டும். சித்தாந்த ரீதியில் உறுதியான, கட்சியுடன் இணைந்தவர்களை அதிக அளவில் கொண்டு வர வேண்டும்.
தற்போதைய தேர்தலில் என்ன பிரச்சனைகள் இருக்கிறது?
ஒரு அமைதியான வாக்காளரின் மனதில் இருப்பது என்னவென்றால், மக்கள் சிதைக்கப்பட்டுள்ளனர் என்பதுதான். அரசாங்கத்திற்கு எதிராக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றுவதற்கான தீப்பொறியை மக்கள் இழந்துவிட்டதாகத் தெரிகிறது. ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் இப்படிப்பட்ட ஒரு வர்க்க வாக்காளர்களாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. பணவீக்கம் மற்றும் வேலையின்மை காரணமாக அவர் (இந்த வகுப்பைச் சேர்ந்த ஒரு பொதுவான நபர்) மனச்சோர்வடைந்துள்ளார். மோடி காட்டிய அச்சே தின் கனவு ஒவ்வொரு நாளும் உடைந்து வருகிறது. எனவே, பணவீக்கம் மிக முக்கியமான பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் முக்கியப் பிரச்னையாக இருக்கிறது.
மக்கள் எத்தனையோ பிரச்சனைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட அடக்குமுறையைப் (ஆளும் கட்சி செய்யும் அடக்குமுறை) பார்த்து அவர்களால் பேச முடியவில்லை. எனது அசாம் விவகாரம், ஹர்திக் படேல் மீதான தேசத்துரோக வழக்குகள், பத்திரிகையாளர் தவால் படேல் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, விபுல் சௌத்ரி மீதான வழக்கு – இந்த அரசாங்கம் மக்களை குறிவைப்பதைப் பார்த்து ஏராளமான மக்களால் பேச முடியவில்லை. எனவே, மிரட்டலும் சர்வாதிகாரமும் மிக அதிகமாக இருக்கிறது.
வேலையில்லாத் திண்டாட்டம், வினாத்தாள் கசிவு, பணவீக்கம், அரசுப் பணிகளில் சுரண்டப்படும் ஒப்பந்த ஊழியர்கள், அரசு ஊழியர்களின் பிரச்சினைகள் – பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் நிலையான ஊதிய ஊழியர்களின் பிரச்சினைகள் – இவை அனைத்தும் மக்களைத் தொந்தரவு செய்கின்றன. அதைச் சுற்றி ஒரு அரசியல் கதை அமைக்கப்படுவதை ஒருவர் பார்க்க முடியாவிட்டாலும், இவையே முக்கியப் பிரச்சினைகளாகும்.
2016-ம் ஆண்டு போராட்டத்திற்கு பிறகு நீங்கள் தலித் தலைவராக உருவெடுத்தீர்கள். அதன்பிறகு, சமூகத்தில் இருந்து எந்த முக்கிய முகமும் வரவில்லை. உங்கள் அமைப்பான ராஷ்டிரிய தலித் அதிகார மஞ்சில், இளைஞர்களை தலைமைப் பதவிக்கு வளர்க்க முயற்சிக்கிறீர்களா?
ஒரு தலைவரை உருவாக்க முடியாது. ஒரு நபர் தனது கடின உழைப்பு, போராட்டம் மற்றும் திறமையால் ஒரு தலைவராக மாறுகிறார். நான் ஒருவரை ஊக்குவிப்பதால் மட்டும் அவர் என்னைப் போல் பேச முடியாது. அஸ்ஸாம் சிறையில் அடைக்கப்படும்போது வரும் தைரியம், நான் ஒருவருக்குப் பதவி அளிப்பதால் மட்டும் வருவதில்லை.
ஒரு தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும்?
நான் பெற்ற புகழையும், பிரபலத்தையும் அனைவரும் பெற வேண்டிய அவசியம் இல்லை. மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் பல தலைவர்கள் உள்ளனர். உனா சம்பவம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. நான் ஒரு முகமாக மாறினேன். என்னைப் போன்ற முகங்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள்.
உங்களை எதிர்த்து பா.ஜ.க வேட்பாளராக மணிபாய் வகேலா (வட்காம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ) போட்டியிடுகிறார். வட்காமில் அவரது செல்வாக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இங்கே எம்.எல்.ஏ.வாக இருந்ததால் இயல்பாகவே அவருக்கு இங்கே தொடர்புகள் இருக்கும். ஆனால், எனது போராட்டம் தனி நபருக்கு எதிரானது அல்ல. எனது போராட்டம் ஒரு சித்தாந்தத்திற்கு எதிரானது. பாஜகவின் பெரும் சக்தி எனக்கு எதிராக முயற்சி செய்து வருகிறது. அசாம் வழக்கில் நான் குறிவைக்கப்பட்ட விதம், அதற்குப் பிறகு இரண்டு வழக்குகளில் நான் தண்டனை பெற்ற விதம். இவ்வளவு அரசியல் பழிவாங்கல்கள் தெரிகிறது. நான் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்துக்கு எதிராகப் போராடுகிறேன். ஒரு தனிநபருக்கு எதிராக அல்ல.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“