Actor turned politician JK Rithesh passes away at the age of 46: நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான ஜே.கே.ரித்தீஷ் இன்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46.
ஜே.கே.ரித்தீஷ், இலங்கை கண்டியில் பிறந்தவர். தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி, பிரபலமானார். 2009 தேர்தலில் இவருக்கு ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.
JK Rithesh Death: ஜே.கே.ரித்தீஷ் குடும்பத்தினருடன் பழைய படம்
அப்போது ராமநாதபுரத்தில் செல்வாக்கு பெற்றிருந்த திமுக முன்னாள் அமைச்சர் சுப தங்கவேலனின் உறவினராக இவரை பலரும் அறிமுகப்படுத்தினர். எம்.பி. தேர்தலில் வென்று, 5 ஆண்டுகள் மக்களவை உறுப்பினராக இருந்தார்.
திமுக.வில் ஸ்டாலின், அழகிரி பூசல்களில் இவரது பெயர் அழகிரி ஆதரவாளராக அடிபட்டது. 2011-க்கு பிறகு அதிமுக பக்கம் வந்தார். எனினும் கடந்த நடிகர் சங்கத் தேர்தல்தான் இவரை மிகவும் பிரபலமாக்கியது. வலிமையான சரத்குமார் - ராதாரவி கூட்டணியை எதிர்த்து களம் இறங்கிய விஷாலுக்கு தூண் போல நின்று உதவினார். விஷாலின் வெற்றியை தொடர்ந்து இவரும் நடிகர் சங்க துணைத் தலைவராக பதவி வகித்தார்.
சமீப காலமாக விஷாலுக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடுகள் முளைத்தன. எனவே நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலின் செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். அதிமுக.வில் ராமநாதபுரம் தொகுதியில் எம்.பி. சீட் எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் இன்று (13-ம் தேதி) பிற்பகலில் எதிர்பாராதவிதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார். ரித்தீஷின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது திடீர் மறைவு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.