சென்னைப் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தரை தேர்வு செய்வதற்கு தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக ஜெகதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் இவரை தற்போது தேடுதல் குழுவின் தலைவராக நியமித்துள்ளனர். ஜே.என்.யூ வளாகத்தில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை கலவரத்தை சரியான முறையில் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தது குறிப்பிடத்தக்கது.
2017ம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, கர்நாடக மாநிலத்தின் சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அதே போன்று தற்போது டெல்லியை சேர்ந்த ஒருவரை தேடுதல் குழுவின் தலைவராக நியமித்துள்ளனர். சர்ச்சைக்குரிய ஒருவரை இந்த பல்கலைக்கழகத்தின் தேடுதல் குழுவில் இணைத்தது எங்களுக்கு சந்தேகத்தை தருகிறது என்று பேராசிரியர்கள் பலரும் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த முடிவுக்கு கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
முக ஸ்டாலின் கண்டனம்
தேடுதல் குழு தலைவர் பதவிக்கு தமிழகத்தில் பொருத்தமானவர் யாரும் கிடைக்கவில்லை என்ற பிம்பத்தை உருவாக்கி, தமிழகத்தை இந்திய அளவில், கல்வி உலகில் அவமானப்படுத்தும் செயல்களை ஆளுநர் உடனே நிறுத்த வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் ஜே.என்.யு பல்கலைக்கழக வன்முறையில், மாணவர்கள் மீது நடத்தபப்ட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் வேடிகை பார்த்த இவருக்கு பரிசு வழங்கி கௌரவிப்பது போல் தமிழக ஆளுநர், இந்த பதவியை ஜெகதீஷூக்கு வழங்கியது மோசமான முன்னுதாரணங்களில் ஒன்றாகும் என்றும் கூறியுள்ளார் ஸ்டாலின்.
அரசியல் சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவின் தலைவராக டெல்லி #JNU பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை தமிழக ஆளுநர் நியமித்தது பாஜக-வின் காவிமயக் கல்விக் கொள்கையை தமிழக உயர்கல்வியில் புகுத்துவதற்காகவா? pic.twitter.com/wXX402CXeA
— M.K.Stalin (@mkstalin) March 5, 2020
டாக்டர் ராமதாஸ் கண்டனம்
தேடல் குழுவின் தலைவராக ஜெகதீஷ் குமாரை ஆளுநர் நியமித்திருப்பது கண்டனத்திற்கு உரியது. துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா என்றும், வெளிமாநிலத்தவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தேடல் குழு தலைவராக ஜெகதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.வெளிமாநில துணை வேந்தரால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழிவது போல் சென்னை பல்கலைக்கழகமும் சீரழியக்கூடாது என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் ”தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் படிப்படியாக வெளிமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது. இந்த அணுகுமுறையை பல்கலைக்கழக வேந்தர் கைவிட வேண்டும். தமிழக அரசு இதை அனுமதிக்கக்கூடாது” என்றும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
3. தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் படிப்படியாக வெளிமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது. இந்த அணுகுமுறையை பல்கலைக்கழக வேந்தர் கைவிட வேண்டும். தமிழக அரசு இதை அனுமதிக்கக்கூடாது!
— Dr S RAMADOSS (@drramadoss) March 5, 2020
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”