/tamil-ie/media/media_files/uploads/2023/04/TN-EB-Minister-Senthil-Balaji.jpg)
Minister Senthil Balaji
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், கடந்த 2011-2015-ம் ஆண்டு அ.தி.மு.க காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் பல லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்பட 4 மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்து விட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது, இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால், வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது.
அதேபோல, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை இன்று (மே 16) விசாரித்த சிறப்பு நீதிபதிகள் அமர்வு, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கவும், புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.