தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் 2 சதவீத வாக்குகள் கூட பெறாது எனவும், விஜய்யை புஸ்ஸி ஆனந்த் மதிப்பது இல்லை என்றும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விஜய்யின் ஆலோசகராகவும், த.வெ.க தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் வெளியானது.
இந்த விவகாரம் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, விஜய் என்றும் ஒற்றை நபருக்காக தான் வாக்குகள் வரப்போகிறது என்றும், இந்த சூழலில் புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்துவது கட்சிக்கு பின்னடைவாக அமையும் என்றும் ஆடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜான் ஆரோக்கியசாமி பேசுவது போன்ற மற்றொரு ஆடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் ரகசியங்களை புஸ்ஸி ஆனந்த் வெளிய கசிய விடுகிறார் என்று அந்த ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதல்வராகும் விருப்பம் இருப்பதாகவும் அந்த ஆடியோவில் கூறப்படுகிறது.
சில நேரங்களில் புஸ்ஸி ஆனந்த் கட்சிக்காக பணியாற்றுவது போன்று காண்பித்துக் கொள்கிறார் என்றும், சில நேரத்தில் சுயநலமாக பணியாற்றுகிறார் என்றும் அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோ விவகாரம் தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமின்றி மற்றக் கட்சியினரிடையேயும் பேசுபொருளாகியுள்ளது. அதன்படி, ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆராயப்படுமா என்ற கேள்வி த.வெ.க தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.