சென்னையில் நிலவிய தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்த ஜோலார்பேட்டை - சென்னை தண்ணீர் ரயில் சேவை இன்றுடன் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த மாதங்களில் நிலவிய தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பொருட்டு, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில், தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டு, செயல்படுத்தப்பட்டது.
முதல் சேவை : வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, குடிநீருடன் ஜூலை 12ம் தேதி ரயில். சென்னை நோக்கி புறப்பட்டது. வாழை மற்றும் மலர் தோரணங்கள் கட்டி, பூஜை செய்து தண்ணீர் ரயிலை அலுவலர்கள் அனுப்பி வைத்தனர் . இந்த ரயில் சென்னை வில்லிவாக்கம் காலை 11 30 மணியளவில் வந்து சேர்ந்தது. இதற்காக, ஜோலார்பேட்டை , வில்லிவாக்கம் ஆகிய இரு பகுதிகளிலும், குழாய் அமைக்கும் பணிகள் செய்யப்பட்டன. இதற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, 50 கலன்களில், 25 லட்சம் லிட்டர் நீர், ரயில்களில் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தினசரி, நான்கு சுற்றுகள் அடிப்படையில், 1 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டன.
159 முறை : ரயிலில் குடிநீர் கொண்டு வருவதற்காக ரூ. 65 கோடியை மாநில அரசு ஒதுக்கியது. ரயிலில் நீர் கொண்டு வரும் திட்டத்தின்படி, நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து வரப்பட்டன ஒரு நாளில் 3 முறை தண்ணீர் கொண்டு வரப்படும். ஒருமுறை ரயிலில் தண்ணீர் கொண்டு வருவதுக்கு ரூ. 8 லட்சத்து 60 ஆயிரத்தை ரயில்வேத்துறைக்கு தமிழ்நாடு அரசு கட்டணமாகச் செலுத்தி வந்தது. இதுவரை 159 முறை நீர் கொண்டு வரப்பட்டது. ஆக மொத்தம் ரயில் போக்குவரத்துக்கு மட்டும் ரூ. 14 கோடியே 15 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டது. இப்படிக் கொண்டு வரப்பட்ட நீரில் 10 முதல் 15 சதவீத நீர் வீணாகச் சென்றது. இந்த தண்ணீர் போக்குவரத்தை 20 பேர் கொண்ட குழு கண்காணித்து வந்தது.
சென்னையில் சமீப நாட்களாகப் பெய்த மழை காரணமாக நிலத்தடி நீர் ஓரளவு உயர்ந்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதேபோல், சென்னைக்குக் கிருஷ்ணா நதியிலிருந்தும் நீர் வரத் தொடங்கியது. இதுவரை பதிவான மழையால், பூண்டி, செங்குன்றம் பகுதியில் உள்ள நீர்த் தேக்கங்களும் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக இப்போது, ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் முறையைத் தமிழ்நாடு அரசு இன்றோடு நிறுத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.