"என் டிரஸ் குறித்து விமர்சிக்கும் பெண் வெறுப்பாளர்களான காவிவாதிகளின் நெஞ்சு பொருமலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் போய்ட்டு வந்து, நீங்கள் இன்னும் எரிச்சல் அடையும் வகையில் பதிவுகளை பதிவிடுவேன்" என்று ஜோதிமணி எம்.பி, டுவிட்டரில் தெறிக்கவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் இயங்கும் அமைப்பு ஐ.நா. விட்டல் வாய்ஸ். இந்த அமைப்பு ஆண்டுதோறும் 25 சர்வதேச நாடுகளில் இருந்து இளம்பெண் தலைவர்களை அழைத்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இரண்டாவது முறையாக இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி. (2004ம் ஆண்டில், ஜோதிமணி, இந்த மாநாட்டில் முதன்முறையாக பங்கேற்றிருந்தார். அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களின் மனைவிகள்தான் பெரும்பாலும் இதில் அமைப்பில் அங்கம் வகித்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இந்த மாநாடு, நவம்பர் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், ஜோதிமணி தற்போது பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில், கௌரவிக்கப்படும் அரசியல் தலைவர்கள் தங்களை பற்றி அந்த மாநாட்டில் எடுத்துரைப்பார்கள். தாங்கள் யார், எந்த மாதிரியான குடும்ப சூழல், அரசியலுக்கு வந்த பின்னணி, சந்தித்த சவால்கள், நெருக்கடிகள், சாதனைகள் இப்படி இதுவரை கிடைத்த அனுபவங்களை அங்கு அனைவர் முன்பும் எடுத்து சொல்வார்கள்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா கிளம்பிய ஜோதிமணிக்கு சென்னை ஏர்போர்ட்டில் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார் செந்தில் பாலாஜி. இது சம்பந்தமான போட்டோவையும் தனது பேஸ்புக் பதிவில் போட்டு வாழ்த்து சொன்னார். அதில், "சர்வதேச அளவில் " பெண் அரசியல்வாதிகள் " ( 25 நாடுகளில் இருந்து 25 பெண்கள்) பங்கேற்க்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவிற்கு செல்லும், நமது பாராளுமன்ற உறுப்பினர் S.ஜோதிமணி அவர்கள் வெற்றிமகளாக திரும்ப வேண்டும் என, தாய் தந்தை ஸ்தானத்தில் இருந்து, அன்போடு வாழ்த்திய போது" என்று பதிவிட்டிருந்தார்.
தாய் தந்தை ஸ்தானம் என்று செந்தில் பாலாஜி சொன்னது ஜோதிமணியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் செந்தில் பாலாஜியின் பாசத்தைப் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில், காட்டன் புடவையில் தொகுதிக்குள் வலம் வந்த ஜோதிமணியை, மாடர்ன் டிரஸ்ஸில் சென்னை ஏர்போர்ட்டில் பார்த்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம், ஜோதிமணி அணிந்திருந்த உடை மீதான விமர்சனமும் வழக்கம் போல சோஷியல் மீடியாவில் பரவலாக எழுந்தது. அதற்கு ஜோதிமணி நறுக்கென தன் டுவிட்டரில் பதில் சொல்லி உள்ளார்.
சர்வதேச அளவில் பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் நான் கலந்துகொள்வதற்காக, என் தொகுதி, மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. என் உடை குறித்து விமர்சிக்கும் காவிவாதிகளின், பெண் வெறுப்பாளர்களின் நெஞ்சு பொருமலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த நிகழ்ச்சிக்கு எப்படி டிரஸ் அணிய வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இது என் தனிப்பட்ட உரிமை. அதனால் அமைதியாகுங்கள்.
எப்போதுமே ஏன் பெண்ணின் உடை ஒரு விவாதத்துக்கு உள்ளாகிறது? தனிப்பட்ட ஒருவரது விருப்பத்தின் மீது அடுத்தவர்களுக்கு அப்படி என்ன வேலை? இப்படி உடை குறித்து விமர்சிக்கும் எல்லா ஆண்களும், தமிழ் கலாச்சாரத்தின்படி வேட்டிதான் அணிகிறார்களா? முதலில் மற்றவர்களை மதிப்பதுதான் தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரம். முதலில் அதை கற்றுக்கொள்ளுங்கள்.
காட்டன் சாரீஸ், ஜீன்ஸ், டீ ஷர்ட்டுகள் எனக்கு ரொம்பவும் பிடித்த உடை. நான் போய்ட்டு திரும்பி வந்த உடனேயே நீங்கள் இன்னும் எரிச்சல் அடையும் வகையில் பதிவிடுவேன். அதுவரைக்கும் கலாச்சாரம் என்றால் என்ன என்பதை தேடி கொண்டிருங்கள். பெண்களுக்கு மட்டும் முன்னேறி செல்வதில் ஏன் இவ்வளவு சுமைகள்? ஆண்களுக்கு இப்படி இல்லையே..
பெண் தலைவர்கள் தங்களது தோற்றம், உடை, சிரிப்பு, திருமண வாழ்க்கை போன்றவற்றின் அடிப்படையில் எப்படி தாக்கப்படுகிறார்கள், ஆண்கள் ஏன் அப்படியெல்லாம் அணுகப்படுவதில்லை என்பது குறித்தும் விவாதிப்பதே இந்த கூட்டம். பெண்கள் மீது தொடர்ந்து வெளிப்படுத்தும் இந்த வெறுப்பை எதிர்த்துதான் நாங்கள் திடமாக போராடுகிறோம். எங்களுடன் இணைந்திருக்கும் எல்லா ஆண்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்