பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 'என் மண், என் மக்கள்' பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாத யாத்திரையின் போது திருச்சியில் ஸ்ரீ ரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்த தொண்டர்கள் பா.ஜ.கவுக்கு வந்து விட்டதால் அங்கு தலைவர்கள் தான் அதிகம் உள்ளனர். வேலை இல்லாததால் ஜோதிமணி அப்படி பேசி உள்ளார். ராகுலும், ஜோதிமணியும் சேர்ந்து கர்நாடகாவில் வசூல் வேட்டை நடத்தினார்கள் என்று சொன்னால் தவறாக போய்விடும். ஜோதிமணிக்கு சிவக்குமார் பணம் அனுப்பினார். அதற்கு ஆதாரம் உள்ளது. பெண் என்பதால் அவரை விட்டு வைக்கிறேன். பிழைத்துப் போகட்டும் என்று கூறினார்.
இந்நிலையில், நேற்று (நவ.7) கரூரில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, "பாஜக தலைவர் அண்ணாமலை, என்னை பெண் என்பதால் பிழைச்சு போ என விட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதை சொல்வதற்கு அண்ணாமலை யார். மக்களிடம் இருந்து கொள்ளையடித்து, தமிழ்நாட்டில் ஒரு வசூல் ராஜாவாகி, அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில்தான் அண்ணாமலையை இப்படி பேசுகிறார்.
அண்ணாமலையால் என்னை என்ன செய்ய முடியும். அதிகபட்சம், அண்ணாமலையின் கையிலும், பாஜகவின் கையிலும் இருப்பது அமலாக்கத் துறைதான். அதைத்தான் எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் ஏவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால், அமலாக்கத் துறையை என் வீட்டுக்கு அனுப்பட்டும், அங்கு கஞ்சி போட்ட காட்டன் சேலையை தவிர வேறு எதுவும் கிடைக்காது.
அண்ணாமலையை போல மணல் மாபியாக்களிடம் மாதம் ரூ.60 லட்சம் வாங்கிக் கொண்டு, ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ வில்லை. ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் வீட்டுக்கு வாடகை எனக் கூறுகிறார்கள். அதற்கு இன்று வரை அண்ணாமலை பதில் சொல்லவில்லை. சிலர் வேண்டுமானால் இந்த மிரட்டல்களுக்கு பயப்படலாம். நான் அதற்கான ஆள் கிடையாது.
அவரை போல நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான் கிடையாது நான்" என்று காட்டமான பதிலடி கொடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“