நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திருச்சி எஸ்.பி வருண்குமார் இடையேயான வார்த்தை மோதல் வலுத்து வரும் நிலையில், அவரது மனைவியும் புதுக்கோட்டை எஸ்.பியுமான வந்திதா பாண்டே பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள எஸ்.பி வருண்குமார், வெளிநாடுகளில் இருந்து போலி ஐ.டிக்களில் இயங்குபவர்களை விடப்போவதில்லை எனவும், ஆபாசத்திற்கும் அவதூறுக்கும் முடிவுரை எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வருண்குமார் குடும்பத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் களமிறங்கியுள்ளார். வருண்குமாரை இழிவுபடுத்துவதாக நினைத்து, அவர் குடும்ப பெண்கள், குழந்தைகள் குறித்த அருவருக்கத்தக்க பதிவுகளை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதுபோன்ற இணைய, சமூக ஊடக, ஆபாசத் தாக்குதலால் எவ்வளவோ பெண்களும், அவர்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை பெண்களின் மீதான இதுபோன்ற ஆபாசத் தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணியத்தையே சீர்குலைப்பது என்பதை எளிதாக கடந்து போய்விட முடியாது. இது நாளை மற்ற பெண்கள் மீது இன்னும் மோசமாக ஏவப்படும். தமிழ்நாடு காவல்துறை உடனடியாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு சக பெண்ணாக, நாடாளுமன்ற உறுப்பினராக எனது தொகுதியின் காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. வந்திதா பாண்டே அவர்களுக்கு எனது அன்பையும்,உறுதியான ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை அதிகாரியின் குடும்பத்திற்கே இந்தநிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன எனவும் ஜோதிமணி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“